சேலம் 8 வழிச் சாலைக்காக பாரிசாலன் கைதா ?

பரவிய செய்தி
சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி நெடுஞ்சாலைக்கு எதிராக பேசியதாக தமிழ்தேசிய போராளி பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
சேலம் முதல் சென்னை வரை அமைக்கப்பட உள்ள 8 வழி நெடுஞ்சாலைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகம் எழுந்துள்ளது. 8 வழிச் சாலையால் விவசாய நிலங்கள், வனங்கள், மலைகள் என அனைத்தும் அழிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சமூக வலைத்தளங்களில் பிரபலமான பாரிசாலன் கைதாகியுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.
இலுமினாட்டி புகழ் பாரிசாலன் சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழிச் சாலைக்காக கைதாகி உள்ளார் என்று தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இதற்கு முன்பாக வேலூரில் தனியார் பைக் ஷோரூமில் தகராறு செய்ததற்காக பாரிசாலன் கைது செய்யப்பட்டார். அதற்குள் சேலம் 8 வழிச் சாலைக்காக கைதாகி உள்ளார் என்று கூறுவது தவறான தகவல்.
சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது, இன்னும் சில செயல்களுக்காக பாரிசாலன் மீது சென்னை எம் .ஜி.ஆர் .நகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
வேலூரில் ஷோரூம் பிரச்சனை தொடர்பாக கைதாகுவதற்கு முன்பாகவே ஜூன் 1-ம் தேதி எம்.ஜி.ஐ நகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது வேலூர் வழக்கில் கைதாகியதால் மீண்டும் சென்னை காவல்துறை அவரை ரிமான்ட் செய்துள்ளது. அவரின் மீது போடப்பட்ட பிரிவுகளும், அதனை பற்றியும் காண்போம்.
இந்திய தண்டனைச் சட்டம்-1860 பிரிவு 153A(1) :
பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
இ.த.ச 505 :
உட்பிரிவு 1B – யாராவது ஒரு பயம் அல்லது பீதியை பொது மக்களுக்கு அல்லது ஒரு பிரிவினருக்கு உண்டாக்கி, அதனால் அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு ஒரு கேடு உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் செயல்பட்டால்.
உட்பிரிவு 1C – யாராவது ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்த மக்களை மற்ற ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கு எதிராக ஒரு கலகம் அல்லது சன்டை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் செயல்பட்டால்.
ஒரு அறிக்கை அல்லது பொய்யான தகவல் அல்லது ஒரு பிரகடனத்தை உருவாக்கினாலும், வெளியிட்டாலும் அல்லது பரப்பினாலும் அது குற்றமாகும். அவருக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
உட்பிரிவு 2 – யாராவது இரு வேறு பிரிவினர்களுக்கிடையே அவைகள் ஜாதி, மதம், இனம், மொழி , பிராந்தியம் என பிரிந்திருக்கும் பிரிவினர்களுக்கிடையே உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கடையில் விரோதம், வெறுப்புணர்ச்சி அல்லது கெட்ட எண்ணங்களை தூண்டி வளர்க்க வேண்டும் என்ற கருத்துடன் , ஒரு வதந்தியை அல்லது ஒரு பயத்தை தரும் செய்தியுள்ள அறிக்கை அல்லது தகவலை உண்டாக்குவதும் அல்லது பரப்புவதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
66 ஏ பிரிவு :
தகவல் தொழில் நுட்ப சட்டம் 2008 ரொம்ப விரிவானது. சமூக வலைத்தளம் சார்ந்த குற்றங்களுக்கானது மட்டுமில்லை. தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்கள், வலைத்தள தகவல் திருட்டு, காப்புரிமை இதெல்லாமும் சேர்ந்தது. இணைய தளத்தில் தவறான, அவதூறான தகவல்களை பதிவதைப் பற்றியது தான் 66 ஏ பிரிவு. இந்த சட்டத்தின் 66 முதல் 69 வரையிலான எல்லா பிரிவுகளிலும் இணைய தளம் சார்ந்த குற்றங்களை விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :
விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.
இந்த பிரிவுகளில் பாரிசாலன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், சேலம் 8 வழிச் சாலைக்காக கைதாகி உள்ளார் என்று தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வன்முறையை தூண்டும் விதத்திலும், அவதூறாக பேசுவதும், இன உணர்வை தவறாக தூண்டி விடுபவர்களை போராளி என்றுக் கூறுவதே தவறு.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.