நாடாளுமன்ற உணவகத்தின் விலைப் பட்டியல் எனப் பரவும் தகவல்| உண்மை என்ன ?

பரவிய செய்தி

27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.. உண்மைதான் ஓரிடத்தில் உள்ள விலைப் பட்டியல் : டீ-1.00 ரூ, சூப் – 5.50ரூ, தால் – 1.50ரூ, மீல்ஸ் – 2.00ரூ, சப்பாத்தி – 1.00ரூ, தோசை – 4.00ரூ, பிரியாணி – 8.00ரூ, இவ்வளவு மலிவாக விற்கப்படும் இடம் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான உணவு விடுதியில் தான் !

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற ஊழியர்களுக்கு உணவகத்தில் வழங்கப்படும்  உணவுகளின் விலைப் பட்டியல் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. முகநூலில் பரவிய தகவலை மையமாகக் கொண்டு புத்தகத்தில் வெளியான பகுதியை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

நாடாளுமன்ற உணவகத்தில் உள்ள உணவுகள் மிகவும் குறைந்த விலையில் இருப்பதாக கூறும் இத்தகவல் ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தோராயமாக 2012-ம் ஆண்டில் இருந்தே கொஞ்சம் கூட மாறாமல் பல மொழிகளில் ஃபார்வர்டு செய்து வருகிறார்கள். இப்பதிவு தற்போதும் பகிரப்பட்டு வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

நாடாளுமன்றதில் உள்ள உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவது எப்போதும் சர்ச்சையான ஒன்றாக இருந்து வந்தது.  நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு பணியாற்றுபவர்களுக்கு மானியத்துடன் சொற்ப விலையில் உணவுகள் வழங்கப்படுவதே அதற்கு காரணம். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு உணவு வழங்க 3 உணவகங்கள் உள்ளன.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக உணவின் விலை அதிகரிக்கப்பட்டு வந்தது. மேலும், அந்த உணவிற்கு வழங்கப்படும் மானியம் நீக்கப்படும் எனும் அறிவிப்புகள் வெளியாகியது. 2021-ல் உணவுக்கான மானியம் நீக்கப்பட்டு புதிய விலைப் பட்டியல் வெளியானது. மானியம் நீக்கப்பட்டு சந்தை விலையுடன் சிறிது குறைவான விலையில் உணவுகள் வழங்கப்பட்டால் ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சேமிப்பாகும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

2021 ஜனவரியில் மக்களவை செயலகத்தால் புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சூப் – 25ரூ, தால் – 40ரூ, தோசை – 30ரூ, சிக்கன் பிரியாணி – 100ரூ, மட்டன் பிரியாணி 150ரூ ஆகவும், அதிகபட்சமாக மதிய உணவில் அசைவ பஃப்பெட் 700ரூ, சைவம் 500 ஆகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

உணவு பட்டியலில் இருப்பதிலேயே மிகவும் விலை குறைந்த உணவாக இருப்பது சப்பாத்தியே.. சப்பாத்திக்கு விலை ரூ.3 ஆக இருக்கிறது. இது தொடர்பான செய்திகள் கூட ஜனவரியில் வெளியாகி இருக்கின்றன.

parliament canteen price 1

வைரல் செய்யப்படும் பதிவில் இருக்கும் நாடாளுமன்றத்தின் உணவு விலைப் பட்டியல் 2010க்கு முன்பாக இருந்த விலையாக தோன்றுகிறது. 2010 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் உள்ள ரயில்வே கேட்டரிங் யூனிட் வெளியிட்ட விலைப் பட்டியலில் சப்பாத்தி, தோசை உள்ளிட்ட சில உணவுகளின் விலைகள் ஒத்துப் போகிறது.

முடிவு :

நம் தேடலில், நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக உணவு விடுதியில் மலிவான விலையில் விற்கப்படும் உணவுகள் என பரப்பப்படும் விலைப் பட்டியல் பதிவு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் பரவத் துவங்கி தற்போது வரை பரவி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நாடாளுமன்ற உணவகத்தில் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2021-ல் மானியம் நீக்கப்பட்ட புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற உணவகங்களில் தற்போது மலிவான விலை இல்லாமல் சாதாரண விலையிலேயே உணவுகள் வழங்கப்படுகிறது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button