படேல் சிலையில் விரிசலா ?

பரவிய செய்தி
3000 கோடி செலவில் உருவான படேல் சிலையில் விரிசல்.
மதிப்பீடு
சுருக்கம்
சமூக வலைத்தளங்களில் வைரலாகுவது போன்று படேல் சிலையில் விரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை. வெண்கல உலோகத் தகடுகளை ஒன்றோடொன்று இணைக்க வெல்டிங் செய்ததால் தெரியும் வெள்ளை நிறமே அவை.
விளக்கம்
குஜராத்தில் 2,900 கோடி ரூபாயில் அக்டோபர் 31-ம் தேதி திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவை உண்மை அல்ல.
“ Statue of Unity “ சிலையில் சமீபத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறி வெள்ளை நிறத்தில் இருக்கும் கோடுகளை வட்டமிட்டு குறிபிட்டு உள்ளனர்.
படேல் சிலை வெண்கல உலோகத் தகடுகளைக் கொண்டு உருவாக்கி உள்ளனர். அதில், ஆயிரக்கணக்கான வெண்கல தகடுகளை ஒன்றோடொன்று இணைத்தே படேல் உருவத்தை அமைத்து இருப்பர். உலோகத் தகடுகளை இணைப்பதற்கு புதுவிதமான வெல்டிங் முறை கையாளப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர்.
வெள்ளை நிறத்தில் விரிசல் போன்று சமீபத்தில் தான் தெரிகிறது என்கிறார்கள். ஆனால், அக்டோபர் 31-ம் தேதி படேல் சிலை திறந்த நாளன்று india today social எடுத்த நேரடிக் காட்சிகளில் சிலையில் வெள்ளை நிறத்தில் கோடுகள் இருப்பதை காணலாம். சமீபத்தில் பரவும் படங்களும், வீடியோவில் இருப்பதும் ஒன்றே என்பதை நிரூபிக்க வீடியோ ஆதாரமே போதுமானது.
தனித்தனியான பகுதிகளை இணைக்கும் பொழுது கற்களுக்கு சிமென்ட், உலோகங்களுக்கு வெல்டிங் போன்ற வேலைபாடுகள் நிச்சயம் இருக்கம்.
கன்னியாக்குமரி கடலில் அமைந்து இருக்கும் வள்ளுவரின் சிலையை அருகில் பார்த்தால், இரு பகுதிகளை இணைக்க ஒருவகையான கலவையை பூசியதால் வெள்ளை நிறத்தில் தெரிவதை காணலாம்.
அவ்வாறான முறையே படேல் சிலையிலும் நடைபெற்று உள்ளது. சிலையில் விரிசல் என எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆகையால், படேல் சிலையில் விரிசல் என்ற வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.