பட்டேல் சிலை பகுதியில் இருப்பிடமின்றி இருக்கும் தாய், குழந்தைகளின் காட்சி ?

பரவிய செய்தி

3000 கோடி ரூபாயில் நிறுவப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள பகுதியில் வசிக்க இருப்பிடம் இன்றி இருக்கும் குடும்பம். அங்கே சமைத்து உண்பது போன்று வைரலாகும் புகைப்படம்.

மதிப்பீடு

சுருக்கம்

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே மக்கள் வீடின்றி தெருவில் சமைத்து உண்பது போன்று காண்பது போட்டோஷாப் செய்யப்பட்டவை.

விளக்கம்

அக்டோபர் 31 , 2018-ல் குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் உயர சிலை பிரதமர் திரு.மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சிலை நிறுவியதற்கு முன்பிருந்தே நாட்டில் மக்கள் வறுமையால் வாடும் பொழுது 3000 கோடியில் சிலை அவசியமா என கேள்வி எழுகிறது.

இதனுடன், ஒரு தாய் இரு குழந்தைகளுக்கு தெருவில் சமையல் செய்யும் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது பட்டேல் சிலை தெரிவது போன்று புகைப்படம் அமைந்து இருக்கும். இப்படமானது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

போட்டோஷாப் : 

வைரலாகியப் புகைப்படத்தை உன்னிப்பாக பார்க்கையில் போட்டோஷாப் என தெரிந்து கொள்ளலாம். எனினும், பலரும் உண்மை என நினைத்து பகிர்வதையும் காண முடிகிறது.

படம் எங்கிருந்து எடுக்கபட்டது ?

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் “ Department For International Development “ மூலம் 2001-2002 இடைப்பட்ட காலத்தில் முடிவடைந்த Kolkata urban service for poor எனும் திட்டத்தில் இப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டம் மேற்கு வங்கத்தில் வறுமையில் இருக்கும் மக்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பது, வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்புகள் வழங்குவது, உள்ளிட்டவையை சார்ந்தது.

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையுடன் வைரலாகும் புகைப்படம் DFID ஆல் இதற்கு முன் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பிறகு வறுமையால் வாடும் மக்கள் பற்றிய ஆய்வு, அறிக்கை என வெளியாகும் செய்திகளின் போது இதே படம் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 2013-ல் சிக்கீம் மாநிலத்தில் மக்கள் வறுமையால் பாதிக்கப்படுவது பற்றிய செய்தியில் இப்படம் இடம்பெற்று உள்ளது.

பட்டேல் சிலையுடன் தாய் மற்றும் இரு குழந்தைகள் வீடின்றி தெருவில் சமைத்து உண்பது போன்று இடம் பெறும் காட்சி போட்டோஷாப் என்றாலும் அதன் பின் இருக்கும் கருத்து ஏற்புடையதாகவே இருக்கிறது. இன்றும் வசிக்க இருப்பிடமின்றி ஒரு சமூகம் தெருவோரங்களில், சாக்கடை பகுதியில் என ஒரு சுகாதாரமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்பதை மறுக்கவும் முடியாது.

Please complete the required fields.
ஆதாரம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close