பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எனப் பரவும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், ” இயேசு அழைக்கிறார் ” என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் பல்வேறு நிறுவனங்களில் ரூ.118 கோடி முதலீடு செய்தது தெரிய வந்தது.
மேலும், காருண்யா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த 4.7 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையால் நடத்தப்பட்ட சோதனையும், அங்கு கிடைத்த கணக்கில் காட்டாத 118 கோடி முதலீடு மற்றும் 4.7 தங்கம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கட்டுக்கட்டாக பணத்தை அடிக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” திருவாரூரில் அரிசி ஆலையில் லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட நாகை மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையின்போது ரூ.62 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது ” என 2020 டிசம்பர் 11-ம் தேதி விகடனில் வெளியான செய்தி கிடைத்தது.
” இயேசு அழைக்கிறார் ” என்ற கிறிஸ்தவ அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து பண உதவிகள் மற்றும் வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. பால் தினகரனின் மத பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிகளை வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தியில் வெளியாகி இருக்கிறது.
நாகை மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தனராஜ் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த லஞ்ச பணத்தை பிடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பால் தினகரன் வீட்டில் கைப்பற்றியதாக தவறாக பகிர்ந்து வருகிறார்கள்.