வீட்டில் இருந்தே நடராஜ் பென்சில் பேக்கிங் வேலையில் மாதம் ரூ30,000 சம்பளம் எனப் பரவும் மோசடி !

பரவிய செய்தி

நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது, 1 மாத சம்பளம் உங்கள் 30,000. அட்வான்ஸ் 15,000 பென்சில் பேக்கிங் செய்ய வேண்டும், வீட்டில் திறந்த பொருட்கள் வரும், பொருட்கள் பார்சல் டெலிவரி செய்யப்படும், படிக்காதவர்களும் செய்யலாம், படித்தவர்களும் செய்யலாம், பெண்களும் செய்யலாம். வாட்ஸ்அப் எண் 8485861429 வாட்ஸ்அப் எண் 8485861429, எந்த வேலையும் இன்றே தொடங்குங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

வீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்ய ஏதும் வழிக் கிடைக்காதா எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணையதளத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நடராஜ் பென்சில் நிறுவனம் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு வழங்குவதாகவும், மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்குவதாகவும் கூறும் பதிவுகள் முகநூல் பக்கங்களில் குவிந்து வருகின்றன. சில யூடியூப் சேனல்களிலும் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.

இப்படியான பதிவுகளில், நடராஜ் பென்சில் நிறுவனம்(எடிட் செய்யப்பட்டது) என ஒரு கட்டிடத்தின் முன்பாக பணியாளர்கள் இருக்கும் புகைப்படம், பென்சில், பேனாக்கள் கட்டுக்கட்டாக இருக்கும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இதைப் பார்க்கும், ஆயிரக்கணக்கான மக்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை என்ன ? 

நடராஜ் பென்சில் நிறுவனத்தின் தரப்பில் பேக்கிங் வேலை எனக் கூறும் பதிவுகளில் தொலைபேசி எண்ணை மட்டும் மாற்றி அதே தகவலை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இப்படி கொடுக்கப்படும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கிறது.

பிரபல நடராஜ் மற்றும் அப்சரா பிராண்டில் பென்சில்களை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் யூடியூப் சேனலில், ” நடராஜ் மற்றும் அப்சரா பென்சில்கள் என்ற பெயரில் சமீபத்தில் வெளியான பல வேலைவாய்ப்பு பதிவுகள் மோசடியானவை ” எனக் கூறி கடந்த ஜூன் 25ம் தேதி வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.

2022 ஜனவர் 18ம் தேதி நடராஜ் பென்சில் உடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியான அறிக்கையில், ” ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் வீட்டில் இருந்தே பென்சில் பேக்கிங் செய்யும் எந்தவொரு வேலையையும் வழங்கவில்லை. இதைக் கூறி யாராவது உங்களின் தனிப்பட்ட தகவல்களையும், வங்கி கணக்கு, ஓடிபி போன்றவையை கேட்டால் பகிர வேண்டாம். சமூக வலைதளங்களில் பரவும் இத்தகவல் பொய்யானது மற்றும் மோசடியானவை ” என விளக்கமாக தெரிவித்து உள்ளனர். 

வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புபவர்கள் இப்படி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலியான பதிவுகளை நம்பி தங்களின் தனிப்பட்ட விவரங்களை அளிப்பதால் பணத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க : வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சம்பாதிக்கலாம் என பரவும் மோசடி !

மேலும் படிக்க : காதலர் தின பரிசென பரவும் மோசடி லிங்க்.. இதற்கு பின்னால் என்ன நடக்கிறது ?

இதேபோல், மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு பல ஃபார்வர்டு செய்திகளும், போலியான மோசடி குறுஞ்செய்திகளும் சுற்றி வருகின்றன. எச்சரிக்கையாக இருங்கள்.

முடிவு : 

நம் தேடலில், நடராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது, மாத சம்பளம் 30,000 ரூபாய் அளிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் மோசடி வேலை. அந்நிறுவனம் அப்படி எந்த வேலையையும் வழங்கவில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader