இந்தியாவைத் தவிர எந்த நாட்டு அமைச்சருக்கும் பென்டகனில் வரவேற்பு அளிக்கப்பட்டது இல்லையா ?

பரவிய செய்தி

நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை.. இதுவரை பென்டகன் எந்த நாட்டு அமைச்சருக்கும் இதுபோன்ற வரவேற்பு அளித்ததில்லை.. இன்று நமது “புதிய இந்தியா” மோடி தலைமையில் உலகில் “சக்தி மிக்க” இந்தியா. ஜெய்ஹிந்த்!

மதிப்பீடு

விளக்கம்

ந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அமெரிக்காவின் பென்டகனில் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது பிரதமருக்கு மட்டும் அளிக்கப்படும் மரியாதை எனவும், வேறு எந்த நாட்டு அமைச்சருக்கும் இதுபோன்று வரவேற்பு அளிக்கப்படுவதில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். 2022 செப்டம்பர் 26ம் தேதி அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின்(Lloyd Austin) அவர்களைச் சந்தித்து இருநாட்டுப் பாதுகாப்புக் குறித்துக் கலந்துரையாடினர்.

இவர்களின் சந்திப்புக்கு முன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை சார்பில் இந்திய தேசியக்கொடியுடன் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பிரதமர் தவிர வேறு யாருக்கும் இந்த மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற பதிவின் உண்மைத்தன்மையை அறிய இணையத்தில் இது குறித்துத் தேடிப்பார்த்தோம்.

உண்மையில், பாதுகாப்புத் துறை சார்பில் கொடுக்கப்படும் அணிவகுப்பு மரியாதை பிரதமருக்கு மட்டும் அளிக்கப்படுவதில்லை.

நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பே காங்கிரஸ் ஆட்சியில் 2011 அக்டோபர் 11ம் தேதி இந்தியாவின் கடற்படை தளபதி நிர்மல் வர்மா(Nirmal Verma) அவர்களுக்குப் பென்டகனில் பாதுகாப்புத் துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது தொடர்பான வீடியோ AP Archive எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

Video Link

மேலும், அதே சேனலில் 2019 ஜூலை 22ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் முப்படை தளபதி கமர் பஜ்வா(Qamar Bajwa) அவர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை சார்பில் பாகிஸ்தான் நாட்டு கொடியுடன் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Video Link

2018ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமத் பின் சல்மான்(Prince Mohammed bin Salman) அவர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ்(Jim Mattis) சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Video Link

2015ல் இந்தோனேசியா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு பென்டகனில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட வீடியோவும் கிடைத்தது.

பொதுவாக, பென்டகனுக்கு மற்ற நாடுகளின் பாதுகாப்புத்துறையின் அமைச்சரே செல்வதுண்டு. இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பரிகர், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்கள் சென்ற போதும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல்தான், மற்ற நாட்டின் அமைச்சர், தலைவர்களுக்கும் மரியாதை வழங்கப்பட்டு இருக்கிறது.

2022 பிப்ரவரியில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்டகன் சென்ற போது வரவேற்று அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே நட்பு நாட்டின் அமைச்சர்கள், முப்படை தளபதி போன்றவர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிப்பது நடைமுறையில் இருப்பது தெரியவருகிறது.

முடிவு:

நம் தேடலில், அமெரிக்காவின் பென்டகனில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் அவர்களுக்கு பாதுகாப்புத் துறை சார்பில் கொடுக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை வேறு எந்த நாட்டின் அமைச்சருக்கும் அளிக்கப்படுவதில்லை எனப் பரப்பப்படும் தகவல் பொய்யானது எனத் தெரியவருகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader