மக்கள் நிராகரித்த நல்ல வேட்பாளர்- தோழர் நல்லக்கண்ணு.

பரவிய செய்தி
ஒரு முறை கூட சட்டமன்ற உறுப்பினர் ஆக தகுதி இல்லை என்று மக்கள் ஓரங்கட்டி விட்டனர். ஏன் என்று பார்த்தல்… நேர்மையான மனிதர் அதனால்..
மதிப்பீடு
விளக்கம்
நேர்மையானவர்கள் அரசியல் களத்திற்கு வர வேண்டும், மக்களுக்கு நன்மை செய்பவர்கள் வர வேண்டும் என வெறும் எழுத்துக்களிலும், பேச்சிலும் மட்டுமே வெளிப்படுத்தலாம். ஆனால், உண்மையில் கள அரசியல் எதிர்மாறாக இருக்கிறது.
சமகால அரசியல் தலைவர்களில் மக்களுக்காக போராடிய ஒப்பற்ற நேர்மையான தலைவர் என அனைவராலும் அறியப்படுபவர் தோழர் நல்லக்கண்ணு. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான தோழர்.நல்லக்கண்ணு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே தன் போராட்டங்களை துவங்கி, தமிழகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
மக்களுக்கான போராட்டம், நேர்மையான அரசியல்வாதி, கள செயல்பாடுகள் என தகுதி வாய்ந்தவாரக இருந்தாலும் ஓட்டு அரசியலில் தோற்கடிக்கப்பட்டார் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய வேண்டும்.
தோழர் நல்லக்கண்ணு இருமுறை சட்டசபை தேர்தலிலும், ஒருமுறை மக்களவைத் தேர்தலிலும் என மொத்தம் மூன்று முறை தேர்தல் களம் கண்டார். 1967 மற்றும் 1977 சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திர தொகுதியிலும், 1999-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்டார்.
மூன்று தேர்தலிலும் அவருக்கு மக்கள் கொடுத்தது தோல்வி மட்டுமே. 1999 கோவை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக நின்ற தோழர் நல்லக்கண்ணுவை விட பாஜகவின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் தோழர் நல்லக்கண்ணு தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வருகிறார்.
மக்களுக்காக போராடிய நல்ல வேட்பாளர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்படுவது இயல்பானதாக போய்விட்டது. தோழர் நல்லக்கண்ணு முதல் மணிப்பூரின் இரோம் சர்மிளா வரை மக்களால் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
மாற்றம் வேண்டும் என வெறும் பேச்சிலும், சமூக வலைதளங்களிலும் மட்டும் கூறினால் போதாது களத்தில் நிற்கும் நேர்மையான வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.