பெரியார் மய்யத்தில் ஹிந்தி மொழி | ஹெச்.ராஜா கூறுவது உண்மையா ?

பரவிய செய்தி
பெரியார் மய்யத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்பட்டுள்ளதா? திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி? தார் சட்டியோடு எப்போது கிளம்பப்போகிறார்கள்? – ஹெச்.ராஜா.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கருத்துக்கள் பெரிதும் முன் வைக்கப்படுகின்றன. ஹிந்தி மொழியை திணிக்க கூடாது என அவ்வபோது போராட்டங்களும் நடைபெறுவதுண்டு. இதில், பெரியாரின் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெறுவர்.
பெரியார் மய்யத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்பட்டுள்ளதா? திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி? தார் சட்டியோடு எப்போது கிளம்பப்போகிறார்கள்? @ThanthiTV @news7tamil @News18TamilNadu @polimernews @PTTVOnlineNews @cauverytv @thatsTamil @dinamalarweb pic.twitter.com/igUrpxfUhB
— H Raja (@HRajaBJP) 17 юли 2019 г.
இந்நிலையில், ஜூலை 18-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றின் நுழைவாயிலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பெரியார் மய்யம் என இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரியார் மய்யத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதேபோன்று தினசரி எனும் இணையதளத்திலும், ” வடக்கில் இருந்து வரும் பெரியார் பேரன் எவனும் மொழித் தெரியாமல் திரும்பி போயிடக் கூடாதுன்னு…உஷாரா ” பெரியார் கேந்திரா ” என ஹிந்தி உள்பட மூன்று மொழியிலும் எழுதிருக்கான் .. ஆனா தமிழனுக்கு மட்டும் ஹிந்தி ஒழிக ” என்று இடம்பெற்று இருந்தது. இதேபோன்று ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் இதே கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
தமிழகத்தில் பெரியார் கட்டிடத்தில் ஹிந்தி மொழி இடம்பெற்று இருப்பதாக உலாவும் புகைப்படங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வை முன்னெடுத்தோம். புகைப்படத்தில் பார்ப்பதற்கு பழைய கட்டிடம் போன்று தோற்றத்தில் இருக்கும் அக்கட்டிடத்தின் மேலே மற்றொரு பெயர் பலகை இருப்பதையும் காண முடிந்தது.
அந்த பெயர் பலகை அழிந்து இருந்தாலும் PMCC என எழுத்துக்கள் மட்டும் தெரிந்தன. பெரியார் திராவிட கழகம் சார்ந்த கட்டிடம் என்றால் PMCC எனும் மற்றொரு பெயர் பலகை இருக்க காரணமென்ன ? இதைத்தொடர்ந்து PMCC மற்றும் கட்டிடத்தின் புகைப்படத்தை வைத்து தேடுகையில், அக்கட்டிடம் ஒரு கல்லூரியின் கட்டிடம் என தெரிய வந்தது.
எனினும், அந்த கட்டிடத்திற்கு பெரியாருக்கும் என்ன தொடர்பு எனப் பார்த்தால், அக்கல்லூரியின் பெயர் Periyar Management and computer college என தகவல் கிடைத்தது. அக்கல்லூரியானது தமிழகத்தில் இல்லை, டெல்லியில் உள்ள ஜசோலா எனும் பகுதியில் அமைந்து இருக்கும் கல்வி நிறுவனமாகும். இவை PMCC கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலாகும்.
இரு புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் டெல்லியில் உள்ள கல்லூரியில் ஹிந்தியில் பெரியார் மய்யம் என எழுதி இருப்பதை தமிழகத்தில் உள்ள பெரியார் கட்டிடத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதாக தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
Periyar Management and computer college -ல் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கல்லூரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்து தேடுகையில், www.periyar.org என்ற திராவிட கழக இணையதளத்தில் Institutions sponsored by The Periyar Self-Respect Propaganda Institution and Periyar Maniammai Institute of Science and Technology என்பதற்கு கீழாக 46 கல்வி நிறுவனங்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதில், டெல்லியில் உள்ள இரு கல்லூரிகளில் periyar centre-ம் ஒன்றாகும்.
டெல்லியில் உள்ள பெரியார் சார்ந்த கட்டிடத்தில் ஹிந்தி இருப்பதாக கூறி சிலர் சண்டைக்கு வருவர். ஆனால், டெல்லியில் ஹிந்தி உடன் தமிழும் இடம்பெற்று இருப்பதை முதலில் பார்க்க வேண்டும்.
இங்கு யாரும் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை, ஹிந்தி திணிப்பிற்கு எதிரானவர்கள் என எத்தனை முறை கூறினாலும் சிலருக்கு புரிய வாய்ப்பே இல்லை.
முடிவு :
டெல்லியில் பெரியாரின் பெயரில் இயங்கும் கல்லூரியின் நுழைவாயிலில் பெரியார் மய்யம் என தமிழில் எழுதி இருக்கின்றனர். அதனை வைத்து தமிழ்நாட்டில் உள்ள பெரியார் கட்டிடம், திக அலுவலகம் என தவறான செய்தியை பகிர்ந்து கொண்டே வருகின்றனர்.
டெல்லியில் உள்ள கல்லூரி கட்டிடத்திற்கு ஹிந்தி பெயர் வைக்கமாட்டார்களா என்ன. இதனை அறியாமல் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் மும்மொழிக் பலகை மூலம் திக-வினரை கிண்டல் செய்வதாக நினைத்து செய்தியை பதிவிட்டு உள்ளார். இன்னும் சிலர் தமிழ்நாட்டில் உள்ள திராவிட கழக கட்டிடத்தில் ஹிந்தி மொழி இருப்பதாக தவறான செய்தியை பகிர்ந்து வருகின்றனர்