பெரியார் சுயசாதி பற்று கொண்டவர் என சீமான் கூறியது உண்மையா ?

பரவிய செய்தி

செய்தியாளர் கேள்வி : பெரியார் சாதிய ரீதியாக இயங்கினார் எனக் கூறுகிறீர்களா?

சீமான் : “கோயம்புத்தூரில் நாயகர்களுக்கு சீட் கொடுக்கவில்லை. அவ்வளவுதானா நாயக்கர்மார்களுக்கு இடம் “எனப் பெரியார் எழுதியுள்ளார். 

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் கடந்த 25ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேலு நாச்சியார் நினைவு நாள் மற்றும் கீழவெண்மணி படுகொலையில் இறந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர் ஒருவர் சீமானிடம் “பெரியாருக்குக் குடி பாசம் என நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியெனில் அவர் சாதிய ரீதியாக இயங்கினார் எனக் கூறுகிறீர்களா? எனக் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு சீமான், “கோயம்புத்தூரில் நாயக்கருக்கு சீட் கொடுக்கவில்லை. அவ்வளவுதானா நாயக்க மார்களுக்கு இடம் என பெரியார் எழுதினார் ” இதனை எப்படி எடுத்துக் கொள்வது எனப் பதில் அளித்துள்ளார்.

மேலும், அனைத்து தலைவர்களிடமும் சிறு சிறு பிழைகள் இருக்கிறது. அவர்களிடம் சரியாக உள்ளதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உண்மை என்ன ?

சீமான் கூறியதை போலக் கோயம்புத்தூரில் நாயக்கருக்கு சீட் கொடுக்காததைக் கண்டித்து பெரியார் ஏதேனும் பேசியோ, எழுதியோ உள்ளாரா எனத் தேடினோம். 

1936ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி வெளியான குடியரசு இதழில் நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்” என்ற தலைப்பில் துணைத் தலையங்கம் எழுதியுள்ளார். அது குடி அரசு 1936 பகுதி 2ல் 380வது பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன் சுருக்கம், கோயம்புத்தூர் பகுதியில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர நாயக்கமார் அதாவது  கம்மநாயக்கர்மார் உள்ளனர். இவர்கள் செல்வத்திலும், வியாபாரத்திலும் வேளாளர்களைவிடச் சிறிது குறைந்தவர்கள் அல்ல. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் அங்கம் வகிக்கின்றனர். 

இந்நிலையில் கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 இடங்களில்  ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள் எனக் கூறியுள்ளார். மேலும், தோழர் P.S.G. கங்கா நாயக்கர்,  வேலப்ப நாயக்கர் முதலியவர்கள் காங்கிரசுக்குச் செய்த பணிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கோவை ஜில்லாவில் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாருக்கு ஒரு இந்திய M.L.A., தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு ஒரு மாகாண M.L.A., தோழர் வெள்ளியங்கிரி கவுண்டருக்கு ஒரு அப்பர் சேம்பர் M.L.C., அவர் தம்பி தோழர் பழனிச்சாமி கவுண்டருக்கு ஒரு ஜில்லா போர்டு பிரசிடெண்டு, மற்றும் அவருக்கே ஒரு மாகாண M.L.A., என்று இப்படி இரண்டு குடும்பமே உள்ளதையெல்லாம் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

சென்ற முறை ஜில்லாபோர்டு பிரசிடெண்டு அண்ணன் என்றால் இந்தத் தடவை தம்பிதான் பிரசிடெண்டாக இருக்க வேண்டுமா? ஜில்லா போர்டு உறுப்பினர் வேலைக்கும் அண்ணனுக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று மாப்பிள்ளைக்கு ஒன்று மருமகனுக்கு ஒன்று என்று நான்கைந்தும் ஒரு வீட்டுக்கே போகவேண்டுமா? மற்ற வேளாளர்கள் அல்லது மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தால் போர்டு பாப்பராய்ப் போய்விடுமா? என்று கேட்கின்றோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொங்கு வேளாளர் அதிகம் உள்ள பகுதி என்பதால் அனைத்து இடங்களும் வேளாளருக்கே கொடுக்க வேண்டும் என்றாலும், அந்த ஒரு குடும்பம் தான் வேளாளக் குடும்பமா? மற்ற குடும்பங்கள் குற்றம்பட்ட வேளாள குடும்பமா எனக் கேள்வி எழுப்புகிறார்.

கோயம்புத்தூர் பகுதியில் வேளாளர்கள் பெருமளவில் இருப்பதையொட்டி அவர்கள் தங்களுக்கான பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்றும் முதன்முதலில் கிளர்ச்சி செய்து சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் அவர்களைச் சட்டசபை உறுப்பினராக்கியதில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டவர்களில் நாம் முதன்மையானவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. அத்தகைய நமது முயற்சிக்கு இதுதான் பலனா? அதுவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் மாப்பிள்ளைக்கும் மருமகனுக்கும் மாத்திரம் தானா? மற்ற வேளாளர்களுக்குப் பங்கு இல்லையா?

மேலும், வகுப்பு உரிமை குறித்து பலமாகப் பேசப்படும் இந்த காலத்திலேயே இப்படி ஏமாற்றுகிறார்கள். அதுவும், ஜனத்தொகையும் பிரபலமும் செல்வமும் அரசியல் ஞானமும் ஊக்கமும் கொண்ட நாயக்கர்மார்களுக்கே பட்டை நாமம் சாத்திவிட்டுப் போகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

இதிலிருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மொத்த பிரதிநிதித்துவத்தையும் அளித்ததைக் கண்டித்து பெரியார் எழுதியுள்ளதை அறிய முடிகிறது.

நாயக்கர்களுக்கு மட்டுமின்றி வேளாளர்கள் மக்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்தும் பெரியார் பேசியுள்ளார். மேலும், இன்று ராமதாஸ், சீமான் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பேசிவரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றி 1936 காலக்கட்டத்தில் பெரியார் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரியாருக்கு சுயசாதி பெருமையா ?

பெரியார் தனது சாதியைப் பற்றி 1926, ஆகஸ்ட், 22ம் தேதி வெளியான குடி அரசு இதழில் “விதவா விவாக விளக்கம்” என்ற தலைப்பில் நூல் மதிப்புரை எழுதியுள்ளார்.  அக்கட்டுரை குடி அரசு 1926 பகுதி 2ல் 173வது பக்கத்தில் உள்ளது.  

பெண்களின் மறுமணம் பற்றி அக்கட்டுரையில் கூறுகையில், “நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன். எனது வகுப்பின் பெண்மக்கள் முக்காடுடன் கோஷாவாக இருக்க வேண்டியவர்கள் எனவும், விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பினர் எனவும் வழங்கப்படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும் வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம்” எனக் குறிப்பிடுகிறார்.

பெரியார் ஆந்திர நாயக்கர்களை குறிப்பிடுகிறார். ஆனால் அவரோ கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவர். இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையே சாதிய தொடர்பே இல்லை. ஆனால், பொதுப்படையாக பயன்படுத்தப்படும்நாயக்கர்” என்ற பட்டத்தை கொண்டு பெரியார் சுயசாதி பற்றுடன் செயல்பட்டவர் என்ற தவறான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களை கூட நாயக்கர் என்ற பட்டத்துடன் குறிப்பிடுவதுண்டு.

பெரியார் மதம், சாதி, பெண் அடிமைத்தனம் போன்ற சமூக சீர்கேடுகளை எதிர்த்து தனது வாழ்நாள் இறுதி வரையில் செயல்பட்டவர். அவர் மீது சாதிய பார்வையைப் புகுத்த சிலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், பெரியார் கோயம்புத்தூரில் நாயக்கர்களுக்கு  சீட் கொடுக்கவில்லை எனத் தனது சாதி உணர்வுடன் செயல்பட்டதாகக் கூறுவது உண்மை அல்ல. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரியும்,  இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மொத்த பிரதிநிதித்துவத்தையும் அளித்ததைக் கண்டித்து பெரியார் அக்கட்டுரையை எழுதியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader