This article is from Mar 13, 2020

பெரியார் உறுதிமொழி கூறி நடைபெற்ற திருமணமா?| வைரலாகும் தவறான வீடியோ!

பரவிய செய்தி

இன்று சென்னையில் பெரியார் உறுதிமொழிகள் கூறி திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்!

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

மார்ச் 10-ம் தேதி News N எனும் முகநூல் பக்கத்தில், ” இன்று சென்னையில் பெரியார் உறுதிமொழிகள் கூறி திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்! #பெரியார் #திக #திருமணம் ” என்ற வாசகத்துடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டது.

வீடியோவில், திருமணமான தம்பதிகள் நிற்கும் மேடைக்கு வரும் ஆண் ஒருவர் மணப்பெண்ணுக்கு முத்தம் தருகிறார், அடுத்து வரும் பெண்கள் மணமகனுக்கு முத்தம் தருகிறார்கள். இதுபோல் தொடர்ந்து நடைபெறும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இந்த வீடியோ 5 ஆயிரம் ஷேர்கள் ஆகி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோவை பார்க்கையில் திருமணத்திற்கு பிறகான வரவேற்பு நிகழ்ச்சி போல் இருக்கிறது. அந்த வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் ஒரு சில பதிவுகள் நமக்கு கிடைத்தன.

Facebook link | archived link

மார்ச் 7-ம் தேதி Troll Kwatle எனும் கன்னட முகநூல் பக்கத்தில் ” ஐயயோ, இது ஒரு பாரம்பரிய சம்பிரதாயம் ” என கன்னட மொழியில் வைரல் வீடியோ பதிவாகி இருக்கிறது. மேலும், வீடியோவின் பேக்ரவுண்ட்டில் டிக்டாக் வீடியோவில் அதிகம் பயன்படுத்தப்படும் ” OH NO என ஒருவர் சிரிக்கும் ” சத்தம் இடம்பெற்று இருக்கிறது.

இந்த வீடியோ Troll Kwatle முகநூல் பக்கத்தில் மார்ச் 7-ம் தேதியே பதிவாகி இருக்கிறது. ஆனால், தமிழில் மார்ச் 10-ம் தேதிக்கு பிறகே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழில் வெளியிடப்பட்ட வீடியோவில் பின்னணியில் இருக்கும் சிரிப்பு சத்தம் நீக்கப்பட்டு, ஒலியே இல்லாமல் பதிவிட்டு இருக்கிறார்கள்.

டிக்டாக் வீடியோ ஒலியுடன் வைரல் செய்யப்பட்ட வீடியோவை கன்னட முகநூல் பக்கம் ட்ரோல் செய்யும் விதத்தில் பாரம்பரிய சம்பிரதாயம் என நையாண்டியாகக் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், கன்னட பதிவில் கூட தமிழ் மொழியில் கமெண்ட்களை காண முடிந்தது. ஆக, அந்த வீடியோவை எடுத்து தமிழில் பெரியார் பெயருடன் தவறாக பரப்பி வருவதை அறிய முடிகிறது.

மணமக்களுக்கு வாழ்த்து சொல்ல வருபவர்கள் முத்தம் கொடுக்கும் வீடியோ உண்மையில் எங்கு நடந்தது அல்லது டிக் டாக் வீடியோவிற்காக செய்தார்களா எனத் தெரியவில்லை. தமிழகத்தில் நிகழாத சம்பவத்தை பெரியாருடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader