பெரியாருக்கு வழங்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் !

பரவிய செய்தி
தந்தை பெரியார் சுதந்திர போராட்ட வீரர் என்று அப்போதைய மத்திய அரசால் தாமரை பதக்கம் கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தியின் முகப்பில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டது பாராட்டுகளைப் பெற்றது. எனினும், மறுபுறம் சுதந்திரப் போராட்டத்திற்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம், அவரின் சிலையை எதற்காக வைக்க வேண்டும் என தமிழக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையில், ரமேஷ் முருகேசன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” தந்தை பெரியார் சுதந்திர போராட்ட வீரர் என்று அப்போதைய மத்திய அரசால் தாமரை பதக்கம் கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார் ” என பெரியார் ஈ.வெ.ரா என இடம்பெற்று இருக்கும் தாமிரப் பட்டயம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
” 1972-ம் ஆண்டு இந்தியாவின் 25-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அரசு தாமிரப் பட்டயம் வழங்கியது. அதனுடன் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக விண்ணப்பங்களும் பெறப்பட்டன ” என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை மூலம் அறிய முடிகிறது.
1972-ல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட தாமிரப் பட்டயத்தில் அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப பெயர்கள் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதை இணையத்தில் கிடைக்கும் தாமிரப் பட்டய புகைப்படங்கள் மூலம் அறிய முடிந்தது.
பெரியார் பெயர் பொறிக்கப்பட்ட தாமிரப் பட்டயம் குறித்து சென்னை பெரியார் திடலைச் சேர்ந்த பிரின்ஸ் என்னரசு அவர்களிடம் பேசுகையில், ” ஆம், பெரியாருக்கு தாமிரப் பட்டயம் வழங்கப்பட்டது. இது சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்துதான் அந்த புகைப்படத்தை எடுத்தனர். தாமிரப் பட்டயத்தை பெரியார் இருப்பிடத்துக்கே வந்து கலைஞர் கருணாநிதி வழங்கியபோது எடுக்கப்பட்ட படம் இருக்கிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.
காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த பெரியார், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என தனது தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டி அழித்தார். பெரியார் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.