“உன் காமத்தை அடக்க முடியவில்லை என்றால்”- பெரியார் கூறிய கருத்தா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பெரியார் கூறியதாக பல்வேறு கருத்துக்கள், வாசகங்கள் சமூக வலைதளங்கள், இணையதளங்களில் பெரிதாய் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பரப்பப்படுவதுண்டு. அவற்றில் எவையெல்லாம் உண்மை, எவையெல்லாம் சித்தரிக்கப்பட்ட பொய்கள் என அறியாமலேயே சாமானிய மக்கள் பகிர்ந்து விடுகிறார்கள்.
அப்படி பெரியார் சொன்னதாக பரப்பப்படுபவையில் ஒன்று, ” உன் காமத்தை அடக்க முடியவில்லை என்றால், அதை உன் தாயிடமோ இல்லை தங்கையிடமோ தீர்த்து கொள். அவர்களும் பெண்கள் தான் உன் திருப்தியே உனக்கு முக்கியம் ” என்கிற கருத்து. இதை பெரியார் சொன்னாரா, உண்மை என்ன என்பதைக் கூறுமாறு வாசகர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பெரியார் கூறியதாக பரவும் தகவலுடன் விடுதலை நாளேட்டில் வெளியாகி இருக்கும் பதிவுகளை மேற்கொள்காட்டி பேசி இருப்பார்கள். ஆனால், ஆதாரமில்லாமல் 11.05.1953 என்கிற தேதியை மட்டுமே குறிப்பிட்டு பரப்பி வருகிறார்கள். ஆகையால், இது குறித்து விடுதலை இணையதளத்தில் தேடிய பொழுது, மஞ்சை வசந்தன் என்பவர் ” தாக்கத் தாக்கத் தழைப்பவர் தந்தை பெரியார் ” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையில்,
” அண்மையில் இணைய வெளியில் ஓர் அயோக்கியத்தனமான அவதூறு பரப்பினர். ஒருவன் காம உணர்வு மிகும்போது தன் மகளை அல்லது தன் தாயைக்கூட புணர்ந்து அந்த இச்சையைத் தணித்துக் கொள்ளலாம் எனக் பெரியார் கூறியிருக்கிறார். (ஆதாரம் :11.05.1953-விடுதலை) என்று அப்பட்டமான ஒரு பொய்யை ஆதாரத்தோடு கூறுவதாய் பொய்யான ஆதாரத்தைக் கூறி மோசடியாக, அயோக்கியத்தனமான இணையவெளியில் பரவவிட்டனர். உடனே பெரியார் தொண்டர்கள், 11.05.1953 “விடுதலை” நாளேட்டைத் தேடியெடுத்து, இந்த அயோக்கியர்கள் அவதூறாகப் பரப்பிய அச்செய்தி ” விடுதலை” ஏட்டில் எந்தப் பக்கத்திலும் இல்லையென்பதை எடுத்துக்காட்டி, அவர்களின் மோசடிப் பிரச்சாரத்தைத் தகர்த்தனர் ” என இடம்பெற்று இருக்கிறது.
11.05.1953-ல் வெளியான விடுதலை நாளேட்டில் பெரியார் அப்படியொரு கருத்தை கூறியதாக எந்தவொரு பதிவும் இல்லை. அந்நாளில் வெளியான விடுதலை நாளேட்டின் பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக காணவும்.
முடிவு :
” உன் காமத்தை அடக்க முடியவில்லை என்றால் ” எனத் தொடங்கும் வாசகத்தை பெரியார் கூறவில்லை என பெரியார்வாதிகள் மறுப்பு தெரிவித்த பதிவு விடுதலை இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதேபோல், ஆதாரமாகக் கூறப்படும் 11.05.1953 விடுதலை நாளேட்டில் அப்படியொரு செய்தி வெளியாகவில்லை என அறிந்து கொள்ள முடிகிறது.