This article is from Jan 26, 2022

பெரியார் சிலையைப் பயன்படுத்தியது தவறு என கி.வீரமணி கூறியதாக போலிச் செய்தியை பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி

சுதந்திர தினம் எங்களுக்கு கருப்பு நாள். சுதந்திர தின நாளை கருப்பு தினமாக அறிவித்தவர் தந்தை பெரியார். அவரின் சிலையை குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு பயன்படுத்தியது மிகவும் தவறான செயலாகும் – திராவிட கழக தலைவர் கி.வீரமணி

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தியில் பெரியாரின் சிலை இடம்பெற்றது பேசுப் பொருளாக மாறியுள்ளது. அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றதற்கு பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்த பெரியார் சிலையை குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு பயன்படுத்தியது மிகவும் தவறான செயலாகும் என தி.க தலைவர் வீரமணி கருத்து கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என கி.வீரமணி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி சேனலின் முகநூல் பக்கத்தில் தேடிப்பார்க்கையில், ஜனவரி 26-ம் தேதி அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இதுகுறித்து, விடுதலை நாளிதழ் முகநூல் மற்றும் இணையதளத்தில் தேடிப்பார்க்கையில், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மற்றும் மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் ஏலம் விடும் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கி.வீரமணி  ஜனவரி 25-ம் தேதி வெளியிட்ட அறிக்கையே இறுதியாக இருக்கிறது. குடியரசு தினம் குறித்து அறிக்கை ஏதும் வெளியாகவில்லை.

பரப்பப்படும் நியூஸ் கார்டிற்கும், தந்தி டிவி சேனல் தரப்பில் வெளியிடப்படும் நியூஸ் கார்டுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதை பார்க்க முடிந்தது. இதன் மூலம் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது. சமீப நாட்களாக, போலிச் செய்தியை உருவாக்கி பரப்புபவர்கள் தந்தி டிவி நியூஸ் கார்டுகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், சுதந்திர தின நாளை கருப்பு தினமாக அறிவித்தவர் தந்தை பெரியார் சிலையை குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு பயன்படுத்தியது மிகவும் தவறான செயலாகும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியதாக பாஜகவினர் பரப்பும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader