தமிழ், தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் எனப் பெரியார் பேசினாரா ?

பரவிய செய்தி

“தமிழர் என்பதும் தமிழர் கழகம் என்பதும் தமிழரசுக் கட்சி என்பதும் தமிழர் ராச்சியம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள். தமிழ் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள். கருங்காலிகள்.” – விடுதலை 11.04.1947.

மதிப்பீடு

விளக்கம்

தந்தை பெரியார் அவர்களால் விடுதலை நாளேடு நடத்தப்பட்டது. அதில் 1947, ஏப்ரல் 11ம் தேதி வெளியான நாளிதழில் தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழர் ராஜ்ஜியம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் திராவிடர் என்னும் முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள். தமிழ் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என விடுதலையில் வெளியிடப்பட்டதாக நீண்ட காலமாக சமூக வலைதளைங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

உண்மை என்ன ?

பெரியார் மற்றும் விடுதலை குறித்துப் பரவக்கூடிய இத்தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியச் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் அமைந்துள்ள “ பெரியார் பகுத்தறிவாளர்கள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தினை ” நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

பரவும் செய்தியில் குறிப்பிட்டுள்ள 11.04.1947ல் வெளியான விடுதலையின் மூல நாளிதழினை பார்த்தோம். அந்நாளிதழின் 3ம் பக்கத்தில் “ பழங்குடி மக்கள் இழிவைப் போக்கும் உண்மை ஸ்தாபனம் திராவிடர் கழகம் ” என்ற தலைப்பில் ‘அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டத்தில் பெரியார் வீர முழக்கம்’ எனச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கோகலே மண்டபத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில் அடக்குமுறைச் சட்ட கண்டனக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வில் பெரியார் பேசிய முழு பேச்சும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் “இழிவு நீங்கத் திராவிடர் இனப்பெயர்” என்ற துணைத் தலைப்பின் கீழ் தமிழ், தமிழர் குறித்து சில தகவல்களைப் பெரியார் பேசியுள்ளார். 

அதில் “ தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும் தமிழ் அரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

சக்கிலியன், பறையன், பஞ்சமன், செட்டி, முதலி, நாய்க்கன் என்னும் ஜாதிப் பெயர்களையெல்லாம், சூத்திரன் என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த இழிவு நீங்குவதற்காகத்தான், மொத்தத்தில் ஒரே இனப்பெயரான திராவிடன் என்று சொல்ல வேண்டுமென்கிறேன். அதற்காகத்தான் திராவிடர் கழகமும் வேலை செய்து வருகிறது ” எனப் பேசியுள்ளார்.

சமூக வலைத்தளங்களைப் பரப்பப்படுவது போன்று “தமிழ் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்” என எந்த வார்த்தைகளும் குறிப்பிடப்படவில்லை. 

மேலும்  படிக்க : ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி’ என தந்தைப் பெரியார் சொன்னாரா?

மேலும் படிக்க :  பெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய புகைப்படமா ?| உண்மை என்ன ?

இதேபோன்று, பெரியார் பற்றி பரப்பப்பட்ட பல பொய்களின் உண்மைத் தன்மையினை கண்டறிந்து கட்டுரையாக யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க :  “உன் காமத்தை அடக்க முடியவில்லை என்றால்”- பெரியார் கூறிய கருத்தா ?

முடிவு :

நம் தேடலில், தமிழ், தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என பெரியார் கூறியதாகவும், 11.04.1947 விடுதலையில் செய்தியாக வெளியாகி உள்ளதாகவும் பரப்பப்படுவது உண்மையல்ல என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader