ரோட்டில் முட்டை ஊற்றியவர்களைக் கைது செய்யும் காவல் துறை கஞ்சா கடத்துபவர்களைக் கைது செய்வதில்லையா?

பரவிய செய்தி

வெயிலின் தாக்கத்தை காட்ட ரோட்டில் முட்டை உடைத்து ஊற்றி வீடியோ எடுத்தவர்கள் கைது.!! அப்பாடா..நா கூட கஞ்சா வித்தவன கைது பன்னிடீங்களோனு பயந்துடேன்

X link

மதிப்பீடு

விளக்கம்

வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதைக் எடுத்துக்காட்டும் விதமாகச் சாலையில் முட்டை உடைத்து ஊற்றியவரைக் காவல் துறையினர் கைது செய்ததாகவும் இதுவே கஞ்சா விற்பவனைச் செய்பவனைக் கைது செய்யவில்லை என்றும் தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தள பிரிவு பொறுப்பாளர் சங்கி பிரின்ஸ் என்பவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உண்மை என்ன?

சாலையில் முட்டை உடைத்து ஊற்றியது தொடர்பாகத் தேடியதில், ’தந்தி டிவி’, ’நியூஸ் 18 தமிழ்நாடு’ நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதன் தலைப்புகளில் சாலையில் ஆஃப்பாயில் / ஆம்லெட் போட்ட நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள சாலை மற்றும் நினைவுச்சின்னத்தின் சுற்றுச்சுவரின் மீது பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் முட்டையை உடைத்து ஊற்றி வெயிலின் தாக்கத்தை நூதனமான முறையில் உணர்த்த முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்ட தந்தி டிவி, பிரபாகரனைக் காவல் துறையினர் கைது செய்து பின்னர் எச்சரித்து அனுப்பியதாகக் கூறியுள்ளது. இதேபோல் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் தலைப்பில் கைது எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ஆடியோவில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குப் பின் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு தேடியதில் இது தொடர்பாக ‘Etv Bharat’ செய்தி வெளியிட்டிருந்ததையும்  காண முடிந்தது. அதில், எந்த ஒரு இடத்திலும் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதற்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களும் தவறாக தலைப்பிட்டுள்ளது.

அவர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்காக மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். FIR (முதல் தகவல் அறிக்கை) எதுவும் அவர்கள் மீது பதிவு செய்யப்படவில்லை. 

கஞ்சா கடத்தியவர்கள் கைது : 

தமிழ்நாடு கஞ்சா தலைநகராக உள்ளது எனத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் பேசி இருந்தார். தமிழ்நாட்டைக் காட்டிலும் பல மாநிலங்களில் கஞ்சா பறிமுதலும் அது தொடர்பான வழக்குகளும் அதிகமாக உள்ளது என இந்தியப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் அது தொடர்பான கைதுகளை இங்கே தொகுத்துள்ளோம். 

ஏப்ரல் 22, 2024 அன்று கோவை அன்னூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞர் ராஜேஷ் குமார் சேதி என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. அந்நபரிடம் இருந்து 12.4 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் கடந்த ஏப்ரல் 7ம் தேதி மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற சீலன், சீனிவாசன், பங்காருகிருஷ்ணன், வீரபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான செய்தியின்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திராவில் இருந்து உசிலம்பட்டிக்குக் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கிராம் கஞ்சாவை வாகன சோதனையின் போது காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் திருப்பத்தூா், கந்திலி அருகே 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், அதில் தொடர்புடைய 3 பேரைக் காவல் துறை கைது செய்துள்ளது.  இன்னும் கஞ்சா மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆனால், பாஜக மற்றும் வலதுசாரிகள் தமிழ்நாட்டில் போதைப் பொருளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கத் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க : ‘தமிழ்நாடு கஞ்சாவின் தலைநகரம்’, ‘காலை உணவுத் திட்டம்’ பற்றி அண்ணாமலை சொன்ன பொய்கள்!

மேலும் படிக்க : குட்கா கடத்தலை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்.. பின்னணி என்ன? தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

முடிவு : 

தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் அதிகரிப்பதைச் சாலையில் முட்டை உடைத்து ஊற்றி வெளிப்படுத்தியவர்களைக் கைது செய்கிறார்கள். ஆனால், கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றும் பரவும் தகவல் உண்மை அல்ல. 

சாலையில் முட்டை உடைத்து ஊற்றியவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மட்டுமே செய்துள்ளனர். அவர்கள் மீது FIR பதிவோ கைதோ செய்யப்படவில்லை. மேலும் கஞ்சா மற்றும் போதைப் பொருளுக்கு எதிராகவும் தமிழ்நாடு காவல் துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader