மோடிக்கு ஓட்டு போடாதீர்கள்.. வைரலாகும் போலியான பெட்ரோல் பில் !

பரவிய செய்தி
விலையைக் குறைக்க 2018இல் செய்தது போலவே இதைச் செய்யுங்கள் என வைரலாகும் பெட்ரோல் பில் !!
மதிப்பீடு
விளக்கம்
உங்களுக்கு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றால் மோடிக்கு மீண்டும் ஓட்டு போடாதீர்கள் என 2018-ம் ஆண்டில் மும்பை பெட்ரோல் பங்க் ஒன்றின் பில்லில் குறிப்பிட்டு உள்ளதாகக் கூறி TN Deserves Better எனும் முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
இந்த பெட்ரோல் பில் ஆனது கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
மும்பையின் விக்ரோலி எனும் பகுதியில் உள்ள சாய் பாலாஜி பெட்ரோலியம் எனும் பெட்ரோல் பங்க்கில் வழங்கப்பட்டதாக வைரலாகும் பெட்ரோல் பங்க் பில் போலியானது. இதுமட்டுமின்றி, இது கையடக்கமான பில்லிங் கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பிக்க வழங்கப்பட்ட ஒரு மாதிரி படத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. மாதிரி பில்லில் உள்ள தேதி மற்றும் எழுத்துக்களில் முரண்பாடுகள் இருப்பதை காண முடிந்தது.
saibalajihandheld.com எனும் பில்லிங் கருவிகள் தொடர்பான இணையதளத்தில் வழங்கப்பட்டு இருக்கும் மாதிரி பெட்ரோல் பங்க் பில் புகைப்படத்தை எடுத்து ஃபோட்டோஷாப் மூலம் மாற்றி இருக்கிறார்கள்.
வைபவ் எனும் வாடிக்கையாளர் பெயரில் 2012-ம் ஆண்டில் போடப்பட்ட பெட்ரோலுக்கான பில் போன்று உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி படத்தில் ஆண்டு மற்றும் மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் உள்ளிட்ட வாசகங்களை ஃபோட்டோஷாப் மூலம் மாற்றி இருக்கிறார்கள். மேலும், அந்த பில்லில் உள்ள வாகன எண்ணில் எந்தவொரு வாகனத்தின் பதிவும் இல்லை.
முடிவு :
நம் தேடலில், மும்பையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வழங்கப்பட்ட பில்லில் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் என இடம்பெற்றதாக வைரலாகும் பில் போலியானது. பெட்ரோல் பில் மாதிரி ஒன்றில் ஃபோட்டோஷாப் மூலம் உருவாக்கி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.