இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான உண்மையான வரி விதிப்பு எவ்வளவு ?

பரவிய செய்தி

எல்லா பெட்ரோல் பங்கிலும் விலை விவரம் இப்படி பிரித்து வெளியிட வேண்டும். Basic Rate : 30.50, Central Govt Tax 16.50, State Govt tax 31.50 , Distributor 6.55, total 85.05. இப்போது மக்களுக்கு யார் யார் விலை உயர்விற்கு காரணம் என புரியும்.

மதிப்பீடு

விளக்கம்

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பெரிதாக குறைக்கப்படாமல் அல்லது மாறாக விலை உயர்த்தப்பட்டு பார்த்து இருக்கிறோம். பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகள் குறித்து பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அப்படி விதிக்கப்படும் வரிகள் குறித்த விவரங்களை பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட வேண்டும் என மேற்காணும் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

மேற்காணும் பதிவின்படி, மாநில அரசின் அதிகப்படியான வரியே பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலையின் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவிற்குள் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல், டீசலாக விற்பனைக்கு வரும் வரை இடையில் என்னென்ன நிலைகளை கடந்து வருகிறது, மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி எவ்வளவு என்பதை விரிவாக பார்ப்போம்.

நாம் கச்சா எண்ணெய்யை கப்பலில் தான் இந்தியாவிற்கு கொண்டு வருகிறோம். இதை Ocean Freight என்பார்கள். அதற்கான செலவுகளும் எண்ணெய் விலை உடன் இணைக்கப்படும். அதன்பின் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று, அதில் இருந்து பெட்ரோல், டீசல் போன்றவை எடுக்கப்படும். 2020 ஜூலை நிலவரம்படி, 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரூ.3190 ஆக உள்ளது.

பெட்ரோல் விலை கணக்கீட்டில்(ஜூலை2020), முதலில் Ocean Freight உடன் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் ரூ.20.06  என நிர்ணயிக்கப்படுகிறது. அந்த எண்ணெய்யை சுத்திகரிக்க உண்டான செலவு ரூ.4.86 கூட்டப்படுகிறது. இதன்பிறகு முக்கியமான மூன்று நிலைகள் வருகின்றன.

  1. மத்திய கலால் வரி : கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை ஈடுசெய்ய மத்திய அரசு விதிக்கும் வரியே கலால் வரி. மத்திய அரசின் கலால் வரி மற்றும் ரோடு செஸ் மூலம் ரூ32.98 / லிட்டருக்கு சேர்க்கப்படுகிறது.
  2. டீலர் கமிஷன் : பெட்ரோலை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் இடையில் இருக்கும் மாற்றம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.64 வரை சேர்க்கப்படுகிறது.
  3. வாட் வரி : மாநில அரசால் பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிக்கப்படுகிறது. வாட் வரி விதிக்கப்படுவதற்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தோராயமாக ரூ.62 ஆக(ஜூலை2020) இருக்கிறது.

இந்திய தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரையில்  வாட் வரி பெட்ரோலுக்கு 30%, டீசலுக்கு 30% ஆக இருக்கிறது. அதன்படி பார்த்தால், வாட் வரி ரூ.18-ஐ சேர்த்தால் தோராயமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாயாக (டெல்லி) மக்களிடம் பயன்பாட்டிற்கு வருகிறது.

நிலைகள்

பெட்ரோல் விலை 

டீசல் விலை 

Advertisement
கச்சா எண்ணெய் விலை (With Ocean Fright) ரூ.20.06/லி ரூ.20.06/லி
சுத்திகரிப்பு வரை ஆகும் செலவு ( Refinery processing + Refinery margins + OMC margin + Freight Cost , logistics ) ரூ.4.86/லி ரூ.6.97/லி
மத்திய அரசின் வரிகள் (கலால் வரி + ரோடு செஸ்) ரூ.32.98/லி ரூ.31.83
டீலர் கமிஷன் ரூ.3.64/லி ரூ.2.54/லி
மாநில அரசின் வரி (வாட் வரி -30% டெல்லி) ரூ.18.56/லி ரூ.18.83/லி
விற்பனை விலை (டெல்லி-ஜூலை 202) ரூ.80.43/லி ரூ.80.53/லி 

வாட் வரி ஆனது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். அதன் காரணமாகவே ஒவ்வொரு மாநிலத்திலும் விலையில் மாற்றம் காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வாட் வரி விதிப்பில் திருத்தங்களை கொண்டு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்தது. தமிழகத்தில் பெட்ரோல் மீது 34%, டீசல் மீது 27% வாட் வரி விதிக்கப்படுவதாக Petroleum Planning & Analysis Cell உடைய தரவுகள் கூறுகிறது. இன்றைய நிலவரப்படி(ஜூலை 20, 2020) தமிழகத்தில் பெட்ரோல் விலை 83.63 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தோராயமாக 21 ரூபாய் வாட் வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பரவும் தகவலில் மாநில அரசு ரூபாய் 31.50  விதிப்பதாக தவறாக குறிப்பிட்டு உள்ளார்கள். அதேபோல், மத்திய அரசு ரூ16.50 மட்டுமே வசூலிப்பதாக தவறாக கூறப்பட்டுள்ளது. மே 2020-ல் வெளியான செய்தியில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி உள்ளதாக செய்திகளில் வெளியாகியது விவாதங்கள் எழுந்தன.

மேலும படிக்க : இந்தியா ஏற்றுமதி செய்யும் பெட்ரோலின் விலை ரூ.34 மட்டுமா???

மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்றவை அதிக விலையில் விற்க காரணம். அவற்றின் மூலம் கிடைக்கும் வரி வருவாயை அரசாங்கங்களும் நம்பி உள்ளன. இதுவே கச்சா எண்ணெய் குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க காரணம். சில நேரங்களில், கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் போது மத்திய கலால் வரி, மாநில வாட் வரி உயர்த்தப்படுகிறது. அதற்கு உதாரணம் சமீபத்திய நிகழ்வுகளே.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button