பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி விதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடமா ?

பரவிய செய்தி

இந்தியாவில் பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பில் மத்திய அரசின் மீது மட்டுமே பழிசுமத்தும் ஊடகங்கள், மாநில அரசுகள் மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் மக்களே !! வரி விதிப்பு மத்திய அரசு பெட்ரோல் 20%, டீசல் 21%, மாநில அரசு பெட்ரோல் 34%, டீசல் 25% . முக்கியமாக இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிவிதிப்பில் தமிழகம் இரண்டாமிடம் !!

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் பெட்ரோல் விலை மீண்டும் 100-ஐ தொட்டுக் கொண்டிருப்பதால் பெட்ரோல், டீசல் விலை குறித்த கண்டனங்களும், பதிவுகளும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது.

Advertisement

இதற்கிடையில், பெட்ரோல் டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்வதாக பொய் வதந்திகள் பரப்புவதாகவும், மாநில அரசின் வரியே அதிகம் மற்றும் இந்தியாவிலேயே மாநில வரியில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஓர் மீம் பதிவை பரப்பி வருகிறார்கள். அதை தமிழக பாஜகவின் மாநில செயலாளர் சுமதி வேங்கடேசன் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் .

Twitter link | Archive link 

Advertisement

உண்மை என்ன ?

பெட்ரோல், டீசல் மீதான வரிகளில் ஒன்றிய அரசு குறைவான வரியை விதிப்பதாகவும், மாநில அரசுகளே அதிக அளவில் வரியை விதிப்பதாக முன்பே பலமுறை வதந்திகள் பரவி இருந்தன. அப்படி பரவிய வதந்திகள் குறித்து நாம் பலமுறை கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : பெட்ரோல் மீது மத்திய அரசு குறைவான வரியை விதிக்கிறதா ?

மேலும் படிக்க : இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான உண்மையான வரி விதிப்பு எவ்வளவு ?

2021 ஜூன் 1-ம் தேதி டெல்லி நிலவரப்படி, ” பெட்ரோலின் அடிப்படை விலை 36 ரூபாய், கலால் வரி(ஒன்றிய அரசு) 32.90 ரூபாய், வாட் வரி(மாநில அரசு) 21.81 ரூபாய் என மொத்தம் 94.49 ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. ஆக, மாநில வாட் வரியை விட ஒன்றிய அரசின் கலால் வரி அதிகமாகவே இருக்கிறது.

2021 ஏப்ரல் 14-ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தியில், ” பெட்ரோல் மீது கலால் வரி 36% விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆக, பெட்ரோல் மீது 20% மட்டுமே ஒன்றிய அரசு வரி விதிப்பதாகக் கூறுவது பொய். 

அடுத்ததாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியும் பெட்ரோல், டீசல் விலையில் அதிகம் பங்கு வகிக்கின்றன. அதை மறுக்கவும் முடியாது. ஆனால், இந்தியாவிலேயே வாட் வரி விதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறுவதும் பொய்யே.

இந்திய அரசின் Petroleum planning & Analysis cell(PPAC) உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி தொடர்பான அறிக்கைகள் வெளியிடுவதுண்டு. 2021 மே 1-ம் தேதி வெளியான அறிக்கை மட்டுமே கிடைத்தது. 2021 ஜூன் மாத அறிக்கை அங்கு இடம்பெறவில்லை.

2021 மே 1-ம் தேதி அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 15%+13.02ரூ மற்றும் டீசல் மீது 11%+9.62ரூ வாட் வரியை விதிக்கிறது. ஆனால், ராஜஸ்தான் பெட்ரோல் மீது 36%+சாலை செஸ் வரி, மணிப்பூர் 36.50% வாட் வரி, தெலங்கானா 35.20% வாட் வரி, கர்நாடகா 35% வாட் வரி விதிப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை தமிழகத்தை விட அதிகமே.

ஜூன் மாத அறிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், சமீபத்தில் தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டதாக எந்த அறிவிப்போ அல்லது செய்தியோ வெளியாகவில்லை.

ஜூன் 12-ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தியில், ” நாட்டில் அதிக அளவில் வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அடுத்த இரு இடங்களில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு 20% மற்றும் 21% வரி மட்டுமே விதிப்பதாகக் கூறுவது பொய்யே. ஒன்றிய அரசு பெட்ரோல் மீது 36% கலால் வரி விதிக்கிறது. அடுத்ததாக, இந்தியாவிலேயே வாட் வரி அதிகம் விதிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறுவதும் பொய் என்பதையும் அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button