This article is from Apr 07, 2022

பெட்ரோல் விலையை இந்தியா 5% மட்டுமே உயர்த்தியது என பெட்ரோலியத்துறை அமைச்சர் சொன்ன தவறான தகவல் !

பரவிய செய்தி

ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா பெட்ரோல் விலையை 51% அதிகரித்துள்ளது. கனடா 52%, ஜெர்மனி 55%, இங்கிலாந்து 55%, பிரான்ஸ் 50% பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது –  ஹர்தீப் சிங் பூரி, இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் !

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல்  டீசல் விலை உயர்வு காரணமாக ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில், ” ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா பெட்ரோல் விலையை 51% அதிகரித்துள்ளது. கனடா 52%, ஜெர்மனி 55%, இங்கிலாந்து 55%, பிரான்ஸ் 50%, ஸ்பெயின் 58%, இலங்கை 55% பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது ” எனப் பேசியுள்ளார்.

உண்மை என்ன ? 

இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் petroleum planning & analysis cell இணையதளம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை தரவுகளை கொண்டுள்ளது.

வருடம்

/நகரங்கள்

2021 ஏப்ரல்

விலை (ரூ)

2022 ஏப்ரல்

1ம் தேதி

விலை(ரூ)

அதிகரித்த

சதவீதம்

டெல்லி 90.56 101.81 12.42%
மும்பை 96.98 116.72 20.35%
சென்னை 92.58 107.45 16.06%
கொல்கத்தா 90.77 111.35 22.67%

அட்டவணைப்படி, ஏப்ரல் 2021 முதல் 2022 ஏப்ரல் 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சில்லறை விற்பனையில் பெட்ரோல் விலையானது, டெல்லியில் 12.42% , மும்பையில் 20.35% , சென்னையில் 16.06% , கொல்கத்தாவில் 22.67% வரை உயர்ந்து இருக்கிறது. அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதை விட விற்பனை விலை அதிகமாகவே உயர்ந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டேதான் செல்கிறது.

மற்ற நாடுகளை ஒப்பிட்டு அமைச்சர் கூறியதில் முதலாவதாக இடம்பெற்ற அமெரிக்கா பற்றித் தேடுகையில், ” அமெரிக்காவின் Energy Information Administrationன் படி ஒரு கேலனிற்கு 3.7 லிட்டர் உள்ளன. 2021 ஏப்ரல் மாதம் 2.9 டாலர் ஆக இருந்த பெட்ரோல் விலை (ஒரு கேலன்) 2022 ஏப்ரல் 4-ம் தேதி 4.5 டாலர் ஆக உயர்ந்துள்ளது. ஒரு கேலன் பெட்ரோலுக்கே விலையானது 55% உயர்ந்துள்ளது. ஆனால், 2022 ஏப்ரல் 4-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 1.21 டாலர், அதன்படி பார்கையில் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91 ரூபாய். இது இந்தியாவை விட குறைவே.

கனடா நாட்டைப் பொறுத்தவரையில் www2.nrcan.gc.ca இணையதளத்தின் படி, 2021 ஏப்ரல் 6-ம் தேதி அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 128 கனடா சென்ட் ஆக இருந்த விலை 2022 ஏப்ரல் 5-ம் தேதி ஒரு லிட்டர் 175 கனடா சென்ட் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்கையில், 36.71 சதவீதம் விலை உயர்ந்து இருக்கிறது, 52% அல்ல.

இங்கிலாந்து நாட்டில் 2021 ஏப்ரல் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 125 பென்ஸ் ஆக இருந்தது 2022 ஏப்ரல் மாதம் 162 பென்ஸ் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் விற்பனை விலை 29.60 சதவீதம் உயர்ந்துள்ளது, 55% அல்ல.

இலங்கையில் 2021 ஏப்ரல் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் 161 இலங்கையில் ரூபாயில் இருந்து 2022 ஏப்ரல் 4-ம் தேதி 283  இலங்கை ரூபாயாக (95 octane) விலை உயர்ந்துள்ளது. ஓராண்டில் இலங்கையில் பெட்ரோல் விலை 75% மேல் உயர்ந்துள்ளது. ஆனால், இலங்கையில் பொருளாதார நெருக்கடி பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாக இருந்த பெட்ரோல் விலை குறித்த தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.

முடிவு :
நம் தேடலில், ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா 51% , கனடா 52%, இங்கிலாந்து 55%, இலங்கை 55% வரை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறிய சதவீதங்கள் தவறானது.
இந்தியாவில் கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் 12% முதல் 22 சதவீதம் வரை பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கிறது என அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader