பெட்ரோல், டீசல் வருவாயை ராமர் கோவில், அனுமன் சிலைக்கு செலவிட்டோம் என்றாரா வானதி சீனிவாசன் ?

பரவிய செய்தி
பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை பாஜக அரசு வீட்டுக்குக் கொண்டு செல்லவில்லை. ராமர் கோவில், அனுமன் சிலை அமைப்பு போன்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளுக்கு தான் செலவிடுகிறது – வானதி சீனிவாசன், எம்எல்ஏ, பாஜக.
மதிப்பீடு
விளக்கம்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியது பெரும் விவாதத்தை தொடங்கி வைத்தது. இதுகுறித்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை பாஜக அரசு வீட்டுக்குக் கொண்டு செல்லவில்லை. ராமர் கோவில், அனுமன் சிலை அமைப்பு போன்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளுக்கு தான் செலவிடுகிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாக பிபிசி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஏப்ரல் 28-ம் தேதி பெட்ரோல், டீசல் வருவாய் தொடர்பாக வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த 9 நிமிட பேட்டியில், பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை நாங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லவில்லை. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் ” என பேசி இருக்கிறார்.
அவருடைய பேட்டியில், பெட்ரோல் மற்றும் டீசல் வரி வருவாயை ராமர் கோவில், அனுமன் சிலை அமைப்பு போன்றவற்றிற்கு செலவிடுவதாக எங்கும் பேசவில்லை.
இதுகுறித்து, தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல் குமாரை தொடர்பு கொண்டு கேட்கையில், ” இது போலியான செய்தி ” எனத் தெரிவித்து இருந்தார்.
வானதி சீனிவாசன் பற்றி பரப்பப்படும் பிபிசி தமிழ் நியூஸ் குறித்து சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், ” அப்படி எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை”. இது போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என தெளிவாகியது.
முடிவு :
நம் தேடலில், பெட்ரோல், டீசலில் வரும் வருவாயை பாஜக அரசு வீட்டுக்குக் கொண்டு செல்லவில்லை. ராமர் கோவில், அனுமன் சிலை அமைப்பு போன்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளுக்கு தான் செலவிடுகிறது என வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் செய்தி போலியானது, அவர் அப்படி கூறவில்லை என்பதையும் அறிய முடிகிறது.