பி.எஃப்.ஐ அமைப்பை தடை செய்ததால் இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என ஜே.பி.நட்டா கூறினாரா ?

பரவிய செய்தி

இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக உயரும் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா(PFI) எனும் இஸ்லாமிய அமைப்பிற்கு பயங்கரவாத செயல்களில் தொடர்பு இருப்பதாகக் கூறி அந்த அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து, பி.எஃப்.ஐ அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் செயல்பட 5 ஆண்டுகள் தடை விதித்தது ஒன்றிய அரசு.

இந்நிலையில், ” இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக உயரும் ” என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக மாலை மலர் நியூஸ் கார்டு ஒன்று பரவி வருகிறது.

இந்த நியூஸ் கார்டை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் இசை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் பலரும் ஜே.பி.நட்டாவை விமர்சித்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,” தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பி.எஃப்.ஐ அமைப்பை எச்சரித்து இருப்பதாக ” செய்திகளில் வெளியாகி இருக்கிறது. அவர் பி.எஃப்.ஐ அமைப்பு தடையை இந்திய ரூபாய் மதிப்புடன் ஒப்பிட்டதாக எந்த செய்திகளும் கிடைக்கவில்லை.

Twitter link 

ஆகையால், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து மாலைமலர் செய்தியின் சமூக வலைதள பக்கங்களை ஆராய்கையில், செப்டம்பர் 28ம் தேதி ” மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற பாரதிய ஜனதா புதிய வியூகம்- பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை ” என்ற நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.

Facebook link 

மேற்காணும் செய்தியில், பி.எஃப்.ஐ அமைப்பை தடையுடன் இந்திய ரூபாய் மதிப்பை ஒப்பிட்டு நட்டா பேசியது போன்று போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள்.

பாஜக ஆட்சியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 81 ரூபாயைத் தாண்டி பெரும் வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக உயரும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader