கிட்டிப்புள் விளையாடும் பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்களின் வைரல் வீடியோ !

பரவிய செய்தி
பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள் நம் தமிழ் விளையாட்டான கிட்டிப்புள் விளையாட்டை எவ்வளவு சந்தோஷமாக விளையாடுகின்றனர் தமிழன் என பெருமை கொள்வோம் .
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் 1980 மற்றும் 90-களில் பிறந்து வளர்ந்தவர்கள் கிட்டிப்புள் விளையாட்டு குறித்து நன்கு அறிந்து இருப்பர். ஆனால், தற்போதுள்ள தலைமுறைக்கு கிட்டிபிள் விளையாடு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட் விளையாட்டிற்கு தொடக்கமே கிட்டிபுள் தான் பலரும் சொல்வதுண்டு. சிறிய குச்சியும், பெரிய குச்சியையும் வைத்து விளையாடும் கிட்டிப்புள் கிராமப்புறங்களில் பெரிதும் பிரபலமாகி இருந்தன.
தமிழகத்தில் பலரும் அறிந்த கிட்டிப்புள் விளையாட்டை பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் விளையாடுவதாக வெளியான வீடியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் ஷேர்கள் மற்றும் லட்சக்கணக்கில் பார்வைகளை பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து பதிவுடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
கிட்டிப்புள் விளையாடும் ராணுவ வீரர்களின் வீடியோ குறித்து தேடிய பொழுது, UNTV public and rescue என்ற யூடியூப் சேனலில் வைரலாகிய வீடியோ குறித்தும், ராணுவ அதிகாரி ஒருவரின் கருத்தும் வெளியாகி இருந்தது. அதில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பரிய வெளிப்புற விளையாட்டு ஷாடோ (Shato)-வை ராணுவ வீரர்கள் விளையாடுவதாக குறிப்பிட்டு உள்ளனர்.
வியட்நாம் அருகே இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஷாடோ (Shato) குறித்து ஆராய்ந்த பொழுது, பிலிப்பைன்ஸ் நாட்டின் Ptv என்ற சேனல் முகநூலில் 4 ஆண்டுகளுக்கு முன்பே பாரம்பரிய தெரு விளையாட்டான ஷாடோ தொடர்பான விளம்பர வீடியோவை வெளியிட்டு இருந்தது.
பல இணையதள கட்டுரைகள் மற்றும் தகவலில் இருந்து, கிட்டிப்புள் என நாம் அழைக்கும் விளையாட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஷாடோ(Shato) , ஷாடோங் (shatong) எனும் பெயரில் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.
அந்நாட்டின் கிராமப்புறங்களில் இந்த விளையாட்டு இன்றும் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டு மத்திய கிழக்கு நாடுகளில் விளையாடப்படுவதாக ஷாடோங் குறித்த கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளனர்.
மற்ற விளையாட்டுகள் :
நாம் விளையாடும் கிட்டிப்புள் போன்றே பல விளையாட்டுகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையாடப்படுகிறது. அவற்றில் ஒன்று பல்லாங்குழி. sungka என அழைக்கப்படும் விளையாட்டு பிலிப்பைன்சில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.Luksong baka எனும் ஆபியம் உள்ளிட்ட விளையாட்டும் இருக்கிறது.
80 மற்றும் 90-களில் தெருக்களில் விளையாடப்பட்ட விளையாட்டுகளை பிலிப்பைன்ஸ் நாட்டிலும் விளையாடி இருக்கிறார்கள். அவர்கள் 90-களில் விளையாடிய விளையாட்டுகளை தெரியப்படுத்த பல வீடியோக்களை பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நாம் கிட்டிப்புள் என அழைக்கும் விளையாட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் எப்படி விளையாடப்படுகிறது, விளையாட்டின் தொடக்கம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், ஷாடோங் (கிட்டிப்புள்) பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.