நிலவில் சந்திரயான்-3 லேண்டர் பதிக்கும் இந்திய சின்னத்தின் முத்திரை எனப் பரவும் தவறானப் புகைப்படம்!

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இஸ்ரோ கடந்த ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தின் அருகே வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
அதில் உள்ள பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் வலம் வரத் தொடங்கியுள்ளது. அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் காலை பொழுதுதான் நிலவும். இதனால் நிலவில் இந்த 14 நாட்கள் ரோவர் பல முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின், பிரக்யான் ரோவர் வலம் வரும் போது அதன் சக்கரங்களில் இருந்து இந்தியாவின் தேசிய சின்னம் (Indian Emblem) மற்றும் இஸ்ரோவின் இலச்சினை (ISRO Logo) நிலவில் முத்திரையிடப்பட்டுள்ளன, அவை நிலவில் எப்போதும் அழியாதவை என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நிலவில் முத்திரை பதிக்கும் பாரதம்…
சந்திரயான் லேன்டரில் இருந்து கீழே இறங்கும் ரோவரில் அதாவது பிரக்யானில் வீல் பகுதியில் இந்த அச்சு இருக்கும்..
இந்த அச்சு நிலவில் பதிக்கப்படும்…. அங்கு காற்று இல்லாததால் இந்த முத்திரை அழியாது…#ஜெய்ஹிந்த் pic.twitter.com/VyDJcJjJeH
— Haris Sabari (@sk25082011) August 23, 2023
India`s emblem & ISRO logo is etched on the moon for eternity.! #PragyanRover touches down on the moon surface. #Chandrayaan3 is a grand success. pic.twitter.com/ukbrGQ3pnv
— Vertigo_Warrior (@VertigoWarrior) August 23, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படம் குறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடியதில், அவர்கள் இது குறித்து எந்த செய்திகளும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் இந்தப் புகைப்படத்தின் கீழ் இடது ஓரத்தில் ‘Krishanshu Garg’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
எனவே இதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்தப் புகைப்படம் “Krishanshu Garg” என்பவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆகஸ்ட் 23 அன்று இஸ்ரோ பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு, அவர் இந்தப் புகைப்படத்தை குறிப்பிட்டு “இதற்காக இனியும் காத்திருக்க முடியாது” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இதே புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு, இது ஒரு கலைப்படைப்பு (Artwork) என்று அதில் குறிப்பிட்டு தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதேபோல, hiclipart.com என்ற இணையதளத்தில் கிருஷ்ணன் கார்க்கின் படத்தில் பயன்படுத்தப்பட்ட அதே அச்சுப் படத்தைக் கண்டோம். இதன் மூலம் இந்தப் புகைப்படத்தை மாதிரியாகக் கொண்டு தான் சமூக ஊடகங்களில் பரவி வரும் படம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.
மேலும், பிரக்யான் ரோவர் நிலவில் வலம் வரும் போது அதன் சக்கரத்தின் அச்சு உண்மையில் எப்படி இருக்கும் என்பது குறித்து விண்வெளிப் பொறியாளர் டோபி லி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ரோவரின் பின் சக்கரங்களில், ஒரு சக்கரத்தில் இஸ்ரோவின் இலட்சினையும், மற்றொரு சக்கரத்தில் இந்தியாவின் தேசிய சின்னமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்து பார்த்ததில் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அதிகாரப்பூர்வமற்றது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: சந்திரயான்-3 எடுத்த நிலவு, செவ்வாய் கிரக புகைப்படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப் போவதாகப் பரவும் வதந்தி !
மேலும் படிக்க: சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !
முடிவு :
நம் தேடலில், நிலவில் சந்திரயான்-3 இன் பிரக்யான் ரோவர் மூலம் நிலவில் பதிக்கப்படும் இந்திய தேசிய சின்னம், இஸ்ரோவின் இலச்சி எனப் பரவும் புகைப்படம் உண்மையானது அல்ல என்பதையும், அது எடிட் செய்யப்பட்ட (Artwork) புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.