மறைந்த புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் எடுத்ததாகப் பரவும் தவறானப் புகைப்படம் !

பரவிய செய்தி
தமிழக அரசின் கொரோனா உதவி தொகை பெற்ற மூதாட்டியை புகைப்படம் எடுத்து புகழ் பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் இன்று விபத்தில் காலமானார்.
மதிப்பீடு
விளக்கம்
சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் நேற்று(மார்ச் 3) மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் ஜேக்கப் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவுகளில், ” தமிழ்நாடு அரசின் கொரோனா உதவித் தொகை பெற்ற மூதாட்டியைப் புகைப்படம் எடுத்து புகழ்ப்பெற்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் காலமானார் ” எனப் இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழக அரசின் கொரோனா உதவி தொகை பெற்ற மூதாட்டியை புகைப்படம் எடுத்து புகழ் பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் இன்று விபத்தில் காலமானார் #Rip pic.twitter.com/Ad13IOUMyQ
— இளையராஜா Dme (@ilayaamala) March 3, 2023
உண்மை என்ன ?
2021 ஜூன் மாதம் கொரோனா நிவாரண உதவித் தொகையாக 2000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து, உதவித் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பையை வாங்கிய நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் என்ற 90 வயதான பாட்டியின் சிரித்த முகம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
#Viral: இணையத்தை வென்ற சிரிப்பு!
Photo- H.Jackson Herby pic.twitter.com/J23jqqPjD4
— ஆனந்த விகடன் (@AnandaVikatan) June 15, 2021
வேலம்மாள் பாட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியதால் அதுகுறித்து செய்தி ஊடகங்களிலும் வெளியாகின. 2021 ஜூன் 15ம் தேதி ஆனந்த விகடனில் ” இணையத்தை வென்ற சிரிப்பு எனப் வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளனர். அந்த பதிவில் புகைப்படம் எடுத்தவர் என ஹெச்.ஜாக்சன் ஹெர்பி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆனந்த விகடன் குறிப்பிட ஜாக்சன் ஹெர்பி குறித்து தேடுகையில், அவருடைய முகநூல் பக்கத்தில் முகப்பு படமாக வேலம்மாள் பாட்டியின் வைரல் படத்தையும், பாட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வைத்து இருக்கிறார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
ஜாக்சன் ஹெர்பி முகநூல் பக்கத்தில் வைரலான வேலம்மாள் பாட்டியின் புகைப்படம், அந்த புகைப்படத்துடன் அவர் முதல்வரை சந்தித்த புகைப்படங்கள் பதிவாகி உள்ளன. வைரல் படத்தின் பின்னணி குறித்து ஜாக்சன் ஹெர்பி விகடனுக்கு அளித்த பேட்டி கட்டுரையாக வெளியாகி இருக்கிறது.
திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் ஜேக்கப் கிளவுட் கிட்சன் என்ற தொழிலை மேற்கொண்டது மட்டுமின்றி புகைப்பட கலைஞராகவும் இருந்தவர். அவரின் ” What a karwad ” உணவு டெலிவரி சமூக ஊடகங்களில் பிரபலமானது. மேலும், கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இருந்த போதும், அவரின் இறுதி ஊர்வத்திலும் எடுத்த புகைப்படங்கள் நெகிழ்வானவை.
முடிவு :
நம் தேடலில், மறைந்த புகைப்படம் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் தமிழ்நாடு அரசின் கொரோனா உதவி தொகை பெற்ற மூதாட்டியை புகைப்படம் எடுத்ததாகப் பரவும் தகவல் தவறானது. அந்த புகைப்படத்தை எடுத்தவர் நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.