மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டதாகத் தவறாகத் தலைப்பிட்ட கலைஞர் செய்தி !

பரவிய செய்தி
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு – வெளியானது அரசாணை !
மதிப்பீடு
விளக்கம்
‘மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு – வெளியானது அரசாணை!’ என்ற தலைப்பில் கலைஞர் செய்திகள் ஒரு நியூஸ் கார்டினை வெளியிட்டுள்ளது. அதில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு! தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு -வெளியானது அரசாணை !#differentlyabledPersons #Reservation #TNGovernment #CMMKStalin #KalaignarSeithigal pic.twitter.com/XQ2241XMXk
— Kalaignar Seithigal (@Kalaignarnews) July 25, 2023
உண்மை என்ன ?
கலைஞர் செய்தி வெளியிட்டுள்ள நியூஸ் கார்டின் தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடுக்கான அரசாணை வெளியிட்டது போல் உள்ளது. மேலும் அந்த நியூஸ் கார்டின் உள்ளே ‘மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைப்பும் உள்ளே இருக்கும் செய்திக்கும் முரண்பாடு உள்ளது.
இச்செய்தி குறித்து முழுமையாக அறிந்து கொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் வெளியிடப்பட்ட அரசாணையை ஆய்வு செய்தோம். 2023, ஜூலை 24ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அரசாணையில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய உகந்தவையாகக் கண்டறியப்பட்ட பணியிடங்களைச் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி நிரப்பிக்கொள்ளும் வகையில் அரசாணை வெளியிட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை ஏற்று மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்துதல் தொடர்பான முதலமைச்சர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி காலிப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கையினை, அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மூலம் அரசின் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டின் படி காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செய்தியைச் சரியாக வெளியிட்டிருந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் கலைஞர் செய்திகள் நியூஸ் கார்டில் தலைப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு :
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 2010 – 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. 1981ம் ஆண்டு அரசுப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத இட ஒதுக்கீட்டினை, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி 4 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியது.
அதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டார். ஆனால், இந்த காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்தும் அதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது குறித்தும் 2019 நவம்பர் மாதம் ‘இந்து தமிழ் திசையில்’ செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில் ‘மாற்றுத்திறனாளிகள் பணிபுரிவதற்கு ஏற்ற பணியிடங்கள் எவை என்பது தொடர்பாக அரசுத் துறைகளுக்கிடையே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதே, பணி நியமனத்துக்கான தாமதத்தின் காரணம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடும், தனியார்த் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அரசாணை பற்றி கலைஞர் செய்திகள் வெளியான நியூஸ் கார்டின் தலைப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது போல் தவறாகப் பொருள் கொள்ளும் வகையில் உள்ளது.