பாஜக வென்ற இடங்களில் கல்வித்தரத்தை உயர்த்துவோம் என பினராயி விஜயன் கூறினாரா?

பரவிய செய்தி

நிருபர் : பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் ?

பினராயி : ” பாஜக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் கல்விதரத்தை உயர்த்துவோம் “.

மதிப்பீடு

விளக்கம்

கடந்த மாதம் கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வெளியாகியதில் ஆளும் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்னணி அதிக இடங்களைப் பிடித்து இருந்தது. இத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆறுதல் பரிசாக 2 நகராட்சி, 23 கிராம ஊராட்சி கிடைத்து  இருந்தது.

இந்நிலையில், பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என நிரூபர் கேட்ட கேள்விக்கு, பாஜக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் கல்வித்தரத்தை உயர்த்துவோம் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்ததாக பதிவுகள், மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Twitter Link | Archive link 

தமிழ் மட்டுமின்றி, பிற மொழிகளில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதே பதிவைப் பகிர்ந்து வருகிறார்கள். இதைப் பகிர்ந்து கேரளாவில் பாஜகவின் நிலை குறித்து பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். வைரலாகும் பதிவின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற பிறகு கேரளா முதல்வர் பினராயி விஜயன், பாஜக வென்ற இடங்களில் கல்வியின் தரத்தை உயர்த்துவோம் எனக் கூறியதாக தமிழ், மலையாளம், ஆங்கிலம் என எந்தவொரு முன்னணி ஊடகத்திலும், இணையதள செய்தியிலும் வெளியாகவில்லை.

பினராயி விஜயன் அப்படியொரு கருத்தைக் கூறியதாக வீடியோ அல்லது செய்தி என எந்தவொரு ஆதாரமும் வைரல் பதிவுகளில் இணைக்கப்படவில்லை. மாறாக, ட்விட்டர் பதிவுகள் மற்றும் மீம்கள் மட்டுமே வைரலாகிக் கொண்டிருக்கிறது.

” மாநிலத்தில் உயர் கல்வியை மேம்படுத்த  நடவடிக்கை எடுக்க உள்ளதை கேரளா முதல்வர் கூறியதாக ” டிசம்பர் 22-ம் தேதி தி ஹிந்துவில் வெளியான செய்தி கிடைத்தது. ஆனால், அதிலும், பாஜக குறித்த வார்த்தை ஏதும் இடம்பெறவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகி சில தினங்களுக்கு பிறகு வெளியான செய்தி இது.

” பாஜக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் கல்விதரத்தை உயர்த்துவோம் என பினராயி விஜயன் தெரிவித்ததாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பரவுவது போன்று கேரளாவிலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டும் பதிவுகள் சுற்றி வருகிறது. அதை உண்மை என நினைத்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள், ஆனால் செய்திகளில் அப்படி ஏதும் வெளியாகவில்லை ” என திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிலர் நமக்கு தகவல் தெரிவித்து இருந்தனர்.

முடிவு : 

கேரளாவில் பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என நிரூபர் கேட்ட கேள்விக்கு பாஜக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் கல்விதரத்தை உயர்த்துவோம் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்ததாக பரவும் தகவல் தவறானது.

மாநிலத்தில் உயர் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக என கேரளா முதல்வர் கூறியதாக மட்டுமே செய்தி வெளியாகி இருக்கிறது.

கேரளாவின் முதல்வர் பாஜகவின் நிலை குறித்து விமர்சித்து இருந்தால் இந்திய அளவில் தலைப்பு செய்தியாகவே வந்திருக்கும். செய்திகள், அதிகாரப்பூர்வ தளங்களில் அப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை. மாறாக, சமூக வலைதளங்களில் மட்டுமே கிண்டல் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.

Please complete the required fields.
Back to top button