பிரான்மலையில் இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா ?

பரவிய செய்தி
1000 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி. இந்துக்களின் உரிமைகள் திராவிடத்தால் அழிக்கப்படுகிறது என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம் – ஹெச்.ராஜா
மதிப்பீடு
சுருக்கம்
பிரான்மலையில் இருக்கும் கோவில்கள் குறித்த தவறான தகவல்களால் மதப் பிரச்சனை தூண்டக் கூடிய செயல்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெறுகிறது.
விளக்கம்
பண்டைய காலத்தில் பறம்புமலை என அழைக்கப்பட்ட இடமானது தற்பொழுது பிரான்மலை என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரான்மலையில் இந்துக் கோவில்களை இடித்து விட்டு அங்கு மசூதியை கட்டியதாக செய்திகளும், முகநூல் பதிவுகளும் பரவி வருகிறது. அத்தகைய செய்தியை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முகநூலில் பகிர்ந்து இருந்தார்.
பிரான்மலையின் மேலே இருந்த முருகன் கோவிலை இடித்து விட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக ஹிந்து சமயம் செய்தியில் கூறப்படுகிறது. பிரான்மலையில் இருக்கும் ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சமீபத்தில் கட்டப்பட்டவை அல்ல. 2012-ம் ஆண்டு youtube-ல் ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா இடம்பெறும் வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாவட்டத்தில் இருக்கும் புனித சுற்றுலா இடங்களில் ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா குறித்தும் இடம்பெற்று உள்ளன. அங்கு நடைபெறும் சந்தன பூசு திருவிழா அங்குள்ள கிராம மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
ஹெச்.ராஜா பகிர்ந்த கட்டுரையில் ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா கட்டி தோராயமாக 50 முதல் 90 ஆண்டுகள் இருக்கும், ஆனால் அங்குள்ள முருகன் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது எனக் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், மசூதி பகுதிக்கு மேலே தான் கோவில் இருப்பதாக அவர்களே கூறியுள்ளனர். பின் எதற்காக கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது என தவறான தலைப்பை வைத்தனர் என்று தெரியவில்லை.
பிரான்மலையின் மீது விநாயகர் கோவில், பாலமுருகன் கோவில், ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா ஆகிய மூன்றும் இருப்பதாக மலையில் பாறையின் மீது எழுதப்பட்ட வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. பிரான்மலைக்கு சென்றவர்களிடம் கோவில்கள் குறித்து கேட்டதில், கோவில் ஒருபுறம், மசூதி ஒருபுறம் இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
மலையில் இருக்கும் கோவிலின் சிலைகள், உண்டியல் உடைந்த நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். பழமையான கோவில் பல நூற்றாண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இப்படி ஆகியிருக்க வாய்ப்புகள் உள்ளன. அங்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு.
அங்குள்ள கோவிலில் புதிதாக சுண்ணாம்பு அடிக்கப்பட்டு உள்ளது. அதில், அல்லா என யாரோ எழுதிவிட்டு சென்றுள்ளதாக கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளனர். அவை தவறான செயலே. ஒவ்வொரு மதத்திலும் மத அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிரான்மலையின் மீது உச்சியில் வேல்கள் அமைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு மக்கள் இப்பொழுதும் சென்று வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக இருந்த கோவில் சிதலமடைந்த நிலையில் இருக்கிறது. அப்படங்களை எடுத்துக் கொண்டு, கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறுவது தவறு அல்லவா ?
பிரான்மலையின் அடிவாரத்தில் பிரசித்திப் பெற்ற பைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வியாதிகளை நீக்கும் என நம்பப்பட்டு வருகிறது.
முடிவு :
பிரான்மலை குறித்த செய்தியில் கோவில்கள், மசூதி வெவ்வேறு இடங்களில் இருப்பதை அவர்களே குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், தலைப்பினை மட்டும் கோவிலை இடித்து அங்கு மசூதி கட்டப்பட்டது என வைத்துள்ளனர். பிரான்மலையில் இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறுவது தவறான தகவல்களே.
மதம் சார்ந்த வன்மத்தை மதநல்லிணக்கம் கொண்ட இம்மண்ணில் விதைக்க தவறான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.