This article is from Dec 09, 2018

நாசா படங்களை வைத்து ட்விட் செய்த மத்திய அமைச்சர்.

பரவிய செய்தி

பிரதமரின் தலைமையின் கீழ் இந்தியாவின் உள்ள அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்தி தந்ததாகவும், புதிய இந்தியாவை உருவாக்கி விட்டதாகக் கூறி நாசாவால் சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய வான்வெளி படத்தை வெளியிட்ட அமைச்சர் பியூஷ் கோயல்.

மதிப்பீடு

சுருக்கம்

கிராமங்களில் மின் வசதி கொடுக்கப்படுவதற்கு முன்பு, கொடுக்கப்பட்டதற்கு பிறகு ஒளிரும் இந்தியாவின் புகைப்படம் என்றுக் கூறி நாசா எடுத்த பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் .

விளக்கம்

2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய சுதந்திரத் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 1000 நாட்களுக்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கும் இலக்கை அடைவோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 28 ,2018 அன்று பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், இமாலய பணியான இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதை சாதித்துக் காட்டியுள்ளோம். இறுதியாக, மணிப்பூர் மாநிலத்தின் செனபட்டி மாவட்டத்தில் லேய்சாங் கிராமத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 1000 நாட்கள் முடிவடைவதற்கு முன்பாகவே நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய கிராம மக்களின் வாழ்வில் இருந்து இருள் நீக்கப்பட்டு புதிய மற்றும் வலிமையான இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூறி இந்தியா ஒளிர்வது போன்ற இரு படங்களை இந்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு வெளியான சில மணி நேரங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். இந்தியாவில் மின் இணைப்பு முழுவதுமாக வழங்கப்படுவதற்கு முன்பும், பின்பும் என வெளிட்ட படங்கள் நாசாவால் எடுக்கப்பட்டு சென்ற ஆண்டு வெளியிடப்பட்டவை. சென்ற ஆண்டு நாசா வெளியிட்ட படத்தை பிரதமரின் மின்மயமாக்கம் இலக்கு வெற்றி அடைந்து விட்டது என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பியூஷ் கோயல்.

2011-ல் நாசா NOAA Suomi National Polar-orbiting partnership (NPP) என்ற செயற்கைக்கோளை செலுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தெளிவான ( NIGHT LIGHT ) இரவு நேர படத்தை நேர்த்தியாகவும், எப்போதும் கிடைக்கும் வகையிலான முயற்சியில் ஈடுபட்டனர். அதில், அமரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட படம் தான் முதலில் உள்ளது. இரண்டாவது படம் 2016-ல் எடுக்கப்பட்டு 2017-ல் வெளியிடப்பட்டவை. இதன் நோக்கம் உலகில் குறிப்பிட்ட ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தால் வசிக்கும் பகுதிகள் அதிகரிப்பதை மேற்கோள்காட்டுவதே. பூமியின் பல பகுதியில் உள்ள இடங்களையும் நாசா இரவு நேர காட்சியாக படம் பிடித்துள்ளது.

அதில், இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதலால் போன்றவை சில ஆண்டுகளிலேயே அதிகரித்ததை இப்படங்கள் வேறுபடுத்திக் காட்டியுள்ளன. இதே படங்களை வைத்து தீபாவளி அன்று ஒளிரும் இந்தியாவை நாசா வெளியிட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

நாசாவின் படத்தை வெளியிட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பியூஷ் கோயல், ” இந்த படங்கள் போலியானவை அல்ல. நாசாவின் இப்படங்கள் இந்திய வெளிச்சத்தின் மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறது. ஜியோகிராஃபிக் கூட உறுதி செய்துள்ளது மற்றும் கிராமப்புறங்களில் மின் இணைப்புகள் அமைந்துள்ளதையும் இவை வெளிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

பியூஷ் கோயல் தனது ட்விட்டரில்  நாசாவின் பழைய படத்தை வெளியிட்ட சிறிது நேரத்தில் அதை தவறு என்றுக் கூறி பலர் சமூக வலைத்தள வாசிகள் பதிவிட்டதை தொடர்ந்து இவ்வாறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய அரசாங்கம் 50,000கி.மீ இந்திய சாலைகளில் 30 மில்லியன் தெரு விளக்குகளை அமைத்துள்ளதாக கூறி ரஷ்யாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு சர்ச்சையான சில மணி நேரத்தில் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் கூறியது போன்று அனைத்து இந்திய கிராமங்களுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாஅரசாங்க ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இருளில் இருந்து மீள மீளவில்லை.

கிராம மின் இணைப்பு என்றால் என்ன? (What is rural electrified?)

ஒரு கிராமம் மின் இணைப்பு(Electrified village) பெற்றிருக்கிறது என்றால் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக அர்த்தமில்லை. 10 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு  அளித்தாலே அது மின் இணைப்பு பெற்ற கிராமமாக கருதப்படும். உதாரணமாக 500 வீடுகள் இருந்தால் 50 வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு இருப்பது.

முன்னர் அந்த 10 சதவீத வீடுகளுக்கும் கூட மின் இணைப்பு  இருந்தால் போதும் தொடர்ந்து மின்சாரம் அளிக்கப்பட வேண்டியதில்லை என்று இருந்தது. பல்வேறு விமர்சனங்களுக்கு பின்னர் அக்டோபர் மாதம் சௌபாக்யா திட்டம் உருவாக்கப்பட்டு 6 மில்லியன் வீடுகள் இந்த திட்டத்தில் பயன் பெற்றது.

அரசின் தகவல்களின்படி, 30 லட்சம் கிராமப்புற வீடுகள் அல்லது இந்தியாவில் உள்ள 17 சதவீத கிராமப்புற வீடுகளில் மின் இணைப்பு இல்லை என தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசம் , அஸ்ஸாம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு தற்போது வரை மின் இணைப்பு இல்லை. இந்த மூன்று மாநிலங்களையும் ஆளுவது மத்திய பாஜக அரசு.

கிராமங்கள் மற்றும் குக்கிராமத்தில் மின் இணைப்புகள் வழங்க முயற்சிப்பது சவாலான காரியம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது 1,500 கிராமங்களில் மட்டுமே மின் வசதிகள்  இருந்துள்ளன. 2005-2012-க்கு இடைப்பட்ட 7 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது 1,04,496 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்ட 21.5 மில்லியன் வீடுகளில் 19 மில்லியன் வீடுகள் இலவசமாக மின் இணைப்பை பெற்றனர்.

2017-ல் இருந்து மத்திய பாஜக அரசால் 19,679 கிராமங்களுக்கு மின் இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசால் கண்டுக்கொள்ளப்படாத தொலைத்தூர கிராமங்கள் பல உள்ளன. கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல், அங்குள்ள அனைத்து வீடுகளுக்குமே தடையில்லா மின்சாரம் வழங்கினால் மட்டுமே அங்குள்ள மக்கள் அனைவரும் இருளில் இருந்து மீண்டு வர இயலும்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader