This article is from Jul 03, 2018

கிஸா பிரமீடு மீது தென்படும் மூன்று கிரகங்கள்: அரிய நிகழ்வா ?

பரவிய செய்தி

எகிப்து நாட்டில் உள்ள கிஸா பிரமீடு மேலே புதன், வெள்ளி, சனி கிரகங்கள் வரிசையாக இருப்பதை காணலாம். இந்த நிகழ்வு 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நேரிடும்.

மதிப்பீடு

சுருக்கம்

புதன், வெள்ளி, சனி கிரகங்களை ஒன்றாக காணலாம் என்பது உண்மையாக இருந்தாலும் இணையத்தில் பரவியது போன்று தென்படுவதில்லை.

விளக்கம்

பிரமீடுகளுக்கு மிகவும் புகழ்பெற்ற எகிப்து நாட்டில் அமைந்துள்ள கிஸா பிரமீடுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. அங்குள்ள மூன்று பிரமீடுகளுக்கு மேலாக புதன், வெள்ளி, சனி கிரகங்கள் வரிசையாக குறிப்பிட்ட சாய்ந்த கோணத்தில் நேராக வரும் நிகழ்வு 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுகிறது என்று சமூக வலைத்தளத்தில் பரவுகின்ற படத்தை அதிகம் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

சமீபத்தில் டிசம்பர் 3-ம் தேதி 2012-ல் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எகிப்தின் கிஸா பிரமீடு மீது புதன், வெள்ளி, சனி கிரகங்கள் வரிசையாக தென்பட்டப் புகைப்படம் என ஒரு செய்தியும் உலகவில் வைரலாகியது. ஆனால், கிரகங்களின் நிலைப் பற்றி பரவும் செய்தியில் புகைப்படம் ஒன்றாக இருந்தாலும் அதில் கூறப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் உள்ளன. 2737, 2800, 2373 என்று ஆண்டுகளின் எண்ணிக்கையை மாற்றி மாற்றி கூறியுள்ளனர்.

புதன், வெள்ளி, சனி கிரகங்கள் வரிசையாக 14 டிகிரி சாய்ந்த கோணத்தில் நேராக அமைந்து இருப்பது போன்ற படங்கள் அனைத்தும் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை. 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மூன்று கிரகங்களும் தென்படும் என்றுக் கூறவும் இயலாது.

” டிசம்பர் 3-ம் தேதி 2012-ல் மூன்று கிரகங்களும் தென்பட்டது என்பது உண்மையே. ஆனால், இணையத்தில் பரவும் புகைப்படங்கள் போன்று வரிசையாக ஒன்றும் தென்படவில்லை. இதுபோன்ற சம்பவம் 2007-ம் ஆண்டிலும் நடைபெற்றுள்ளது “.

ஒரு படத்தில் மூன்று கிரகங்கள் மூன்று பிரமீடுக்கு மேலே நேராகவும், மூன்று கிரகமும் நேர்க்கோட்டில் இருப்பது போன்று இருந்திருக்கும். மற்றொரு படத்தில் மூன்று பிரமீடு மேலே மூன்று கிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது போன்று அமைந்துள்ளது. இவ்விரு படங்களும் கிராபிக்ஸ் மூலம் செய்து இருப்பர்.

புதன், வெள்ளி, சனி கிரகங்கள் ஒன்றாக டிசம்பர் 3-ம் தேதி 2012-ல் தென்பட்டது என்பது உண்மையாக இருந்தாலும் இணையத்தில் சித்தரிக்கப்பட்ட படங்கள் போன்று தென்படாது. இதை 2012-ல் தென்பட்ட மூன்று கிரகங்கள் நிலையை எடுத்த புகைப்படத்தின் வாயிலாக அறியலாம். இப்படத்தில் பிரகாசமாக காணப்படுவது வெள்ளி கிரகம், கீழே இடப்பக்கம் இருப்பது புதன் மற்றும் மேலே வலப்பக்கம் இருப்பது சனிக் கிரகம்.

கிரகங்கள் ஒன்றாக தென்படுவது அரிதான நிகழ்வாக இருந்தாலும் 2800 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிஸா பிரமீடு மீது வரிசையாக தென்படுகிறது என்றுக் கூறுவதெல்லாம் சித்தரிக்கப்பட்ட செய்தியே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader