வானில் தெரிந்த 5 கோள்கள் என அமிதாப்பச்சன் பதிவிட்ட பழைய AI வீடியோ !

பரவிய செய்தி
என்ன ஒரு அழகான காட்சி…! 5 கிரகங்கள் இன்று ஒன்றாக இணைந்துள்ளன… அழகான மற்றும் அரிதான… நீங்களும் இதற்குச் சாட்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் ..
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 28ம் தேதி வானில் புதன், வியாழன், வீனஸ், யுரேனஸ் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் நிலவிற்கு அருகே தென்படுவது குறித்து செய்திகள் வெளியாகின.
செவ்வாய் வியாழன் வெள்ளி சனி யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் வில் வடிவில் ஒன்றிணைந்துள்ள அரிய நிகழ்வு pic.twitter.com/eozsgIOVJx
— 🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ (@srjk22) March 30, 2023
இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், 5 கிரகங்களும் ஒன்றாக தென்படும் அழகான மற்றும் அரிதானக் காட்சி என குறிப்பிட்டுள்ளார். 5 கோள்களும் ஒரே நேரத்தில் அணிவகுத்த அதிசய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளதாக ‘தந்தி டிவி, மாலை மலர்’ போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலவுக்கு அருகே செவ்வாய் வியாழன் வெள்ளி சனி யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் அடுத்தடுத்து ஒரே நேர்கோட்டில் வில் வடிவில் ஒன்றிணைந்துள்ள அரிய நிகழ்வு… pic.twitter.com/k4evTJqEqD
— விஜய்பதி (@vijipriyan25) March 28, 2023
அதே வீடியோவை அரிய நிகழ்வு எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Prathamesh Dalavi’ எனும் யூடியூப் பக்கத்தில் கடந்த ஜனவரி 26ம் தேதி அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில் ‘Venus, Jupiter, Moon after 6:30pm’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவ்வீடியோவின்நிலைத்தகவலில் “Telescope name:- Celestron inspire 100az” என குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, ‘இந்த வீடியோ AI (Artificial Intelligence) உதவியுடன் எடுக்கப்பட்டது. அதனால்தான் கிரகங்கள் எளிதில் தெரிகிறது. இது செயலி (App) மூலம் எடுக்கப்பட்டது அல்ல’ எனப் பதிவிட்டுள்ளார். அப்பக்கத்தில் இதே போன்று வேறு வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல் கமெண்டில் ஒருவர், ‘தொலைநோக்கியில் வியாழன் கிரகம் மற்றும் அதன் நிலவுகளைப் பெரிதாக்கும் வீடியோவை முதன் முறையாகப் பார்க்கிறேன். அழகாக இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். அதற்கு, ‘But it’s made with AI after shooting the scene’ எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28ம் தேதி ஐந்து கோள்களும் வானில் தோற்றியது குறித்து தேடிய போது, ‘Space.com’ என்ற இணையதளத்தில் இது பற்றி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘The Virtual Telescope Project’ என்னும் யூடியூப் பக்கத்தின் வீடியோ குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், ‘Earth Sky’ என்னும் இணையதளத்திலும் கட்டுரை உள்ளது. அவற்றில் குறிப்பிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ள வீடியோ உடன் ஒத்துப்போகவில்லை.
மேலும் படிக்க : ஊடகங்களே போலிச் செய்தி.. சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாக வதந்தி !
முன்னதாக சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், மார்ச் 28ம் தேதி வானில் தோற்றிய 5 கோள்கள் என நடிகர் அமிதாப்பச்சன் பதிவிட்ட வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி AI உதவியுடன் எடுக்கப்பட்ட வானியல் வீடியோ என்பதை அறிய முடிகிறது.