This article is from Jul 19, 2018

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரம்: இந்திய ரயில்வே புதிய முயற்சி!

பரவிய செய்தி

இந்திய ரயில்வே நிர்வாகம் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தை ரயில்வே நிலையங்களில் நிறுவி உள்ளது. இதில், போடப்படும் ஒவ்வொரு பாட்டில்களுக்கும் ரூ.5 e-wallet-ல் cash back அளிக்கப்படும். மிகச் சிறந்த தொடக்கத்தின் மூலம் தூய்மை இந்தியாவை உருவாக்குவதில் அங்கமாக செயல்படும் இந்திய ரயில்வே நிர்வாகத்தை பாராட்டச் செய்வதோடு இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் இயந்திரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளக்கம்

பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் அதிக பங்கு கொண்டுள்ளன. பிளாஸ்டிக் அழிவதற்கு பல ஆண்டுகள் ஆகும் எனத் தெரிந்தும் பல்வேறு தேவைக்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தண்ணீர் பயன்பாட்டிற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் மிக முக்கியமானவையாக மாறி விட்டது.

ஆகையால், தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்திய பிறகு பொது இடங்களில் தூக்கி எறிவது இயல்பான ஒன்றாக நடைமுறையில் உள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு அடையும் என்ற அக்கறை பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. அதனை மாற்றும் எண்ணத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தை ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம்.

” ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படுத்தும் சீர்க்கேடுகளை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்தால் பணம் கொடுக்கும் புதிய திட்டத்தினை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வதோதரா ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தை ரயில்வே நிர்வாகம் நிறுவியுள்ளது “.

மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த இயந்திரத்தில் போட்டால் அவை நசுக்கப்பட்டு சிறு சிறு துண்டுகளாக சேகரிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு பாட்டில்களுக்கும் ” 5 ரூபாயை e-wallet கணக்கில் ” வரவு வைக்கப்படுகிறது. இயந்திரத்தில் தங்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டால் அவர்களின் paytm போன்ற e-wallet கணக்கில் ரூ.5 வரவு வைக்கப்படும். இதனால் ரயில் நிலையங்களில் தூக்கி வீசப்படும் பாட்டில்கள் இனி இயந்திரத்தை தேடி வரும். மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கள் ஃபைபர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தின் மதிப்பு ரூ.4.5 லட்சம். நாள் ஒன்றிற்கு 5000 பாட்டில்களை இயந்திரத்தால் நசுக்க இயலும். ஜூன் 5-ம் தேதி குஜராத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது போன்று பெங்களூர் ரயில்வே டிவிஷனில் உள்ள நிலையத்திலும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக தென்கிழக்கு ரயில்வே துறையின் மைசூரு ரயில் நிலையம் மற்றும் அகமதாபாத், புனே, மும்பை உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.

” 2016-ல் ஜூன் 5-ம் தேதி பிளாஸ்டிக் பாட்டிலை நசுக்கும் இயந்திரம் மும்பையின் சர்ச்கேட் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டது “. இந்த இயந்திரம் 2016 ஆம் ஆண்டில் இருந்தே ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டு வந்தாலும் பாட்டில்களுக்கு பணம் வழங்கம் புதிய முயற்சியை தற்போது தான் தொடங்கியுள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம். இதேபோன்று ரயில்வேயில் வழங்கப்படும் உணவுகளுக்கு கரும்பு சக்கையால் செய்யப்பட்ட தட்டுகளை வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

2020-ல் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே அனைவரது விருப்பமாக இருந்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை சிக்கனமாக்கியும், இது போன்றே தொடர் முயற்சிகளாலும் மட்டுமே பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க இயலும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader