Snickers சாக்லேட்டிற்கு 65 நாடுகளில் தடையா ?

பரவிய செய்தி
கேன்சர் பாதிப்பு ஏற்படும் என்று Snickers சாக்லேட் தயாரிப்புகளை 65 நாடுகளில் தடை செய்துள்ளனர். இனி, Snickers சாக்லேட்களை குழந்தைகளுக்கு வாங்கி தர வேண்டாம்.
மதிப்பீடு
சுருக்கம்
2016 ஆம் ஆண்டில் Snickers சாக்லேட் ஒன்றில் சிறிய பிளாஸ்டிக் கலந்து விட்டதால் அனைத்து சாக்லேட்களையும் அப்புறப்படுத்த அந்நிறுவனம் அறிவித்தது. அதன் விளைவால் காஸா நகரில் Snickers-ஐ தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
விளக்கம்
சிகாகோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Mars Wrigley Confectionary நிறுவனம் M&M, Snickers, Twix, orbit, Milky way உள்ளிட்ட 29 சாக்லேட் பிரண்ட் தயாரிப்புகளை 180 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
மார்ச் 2016 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய Snickers சாக்லேட்டில் சிவப்பு நிற பிளாஸ்டிக் கலந்து உள்ளதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து Snickers சாக்லேட்களை மொத்தமாக திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், நெதர்லாந்தின் Veghel நகரில் உள்ள தொழிற்சாலைக்கு திருப்பி அனுப்புமாறு 55 நாடுகளில் உள்ள தனது விற்பனையாளர் நிறுவனங்களுக்கு Mars அறிவுறுத்தியது.
நெதர்லாந்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சாக்லேட்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்தாலும், ஸ்ரீலங்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளிலும் ஏற்றுமதி செய்கின்றனர்.
Snickers சாக்லேட்களில் சிவப்பு நிற பிளாஸ்டிக் எவ்வாறு கலந்தது என்று தெளிவாக தெரியவில்லை. எனினும், வாடிக்கையாளர்களுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படக் கூடாது என, best before use நாட்களான “ 19 ஜூன் 2016 முதல் 8 ஜனவரி 2017 தேதிகள் வரை ” இடம்பெற்ற Snickers சாக்லேட்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்தது.
Mars நிறுவனம் Snickers சாக்லேட் தயாரிப்புகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக வெளியிட்ட அறிவிப்பால் அதன் தயாரிப்புகளான mars, Snickers, Milky Way உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விற்பனையும் சரிந்தது. இதன் தாக்கம் 55 நாடுகளில் ஏற்படுத்திய விளைவால் 10 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தது Mars நிறுவனம்.
நெதர்லாந்து Mars நிறுவனத்தில் இருந்து வந்த செய்தியால் காஸா நகரின் வெளிப்புறத்தில் 15 டன் எடை கொண்ட Snickers பீனட் பார் சாக்லேட்களை மொத்தமாக கொட்டி டீசல் ஊற்றி எரித்தது இஸ்லாமிக் ஹமாஸ் ஆணையம்.
2007-ல் இஸ்ரேலின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போராளி அமைப்புகளால் நிலவி வந்த வன்முறையால் ஏற்றுமதிக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. எனவே, Snickers தயாரிப்புகளை மொத்தமாக தீயிட்டு எரித்துள்ளனர். அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தான் 2018 மார்ச்சில் வைரலாகி வருகிறது.
2006-ல் Cadbury தயாரிப்புகளில் Salmonella பாக்டீரியாவின் சுவடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக கூறி 1 மில்லியன் சாக்லேட்களை திரும்ப பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
65 நாடுகளில் Snickers தடை செய்யப்பட்டது என ஆதாரமற்ற செய்திகளும் பரவி வருகிறது. எனவே, மீண்டும் மீண்டும் Snickers வீடியோ காட்சியை பகிர்வதை தவிர்க்கவும். அதே நேரத்தில் பாரம்பரிய இனிப்புகளை உண்பது நல்லது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும் .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.