என்னமா பொய் சொல்றாங்க: பிரதமர் மோடி தடுப்பூசி சோதனைக்கு தன்னை அர்ப்பணித்ததாக பரவும் கதை

பரவிய செய்தி

இன்று Google தேடலில் கிடைத்த செய்தி. ஒரு நிமிடம் நெஞ்சே பதறிவிட்டது. Bharath Bio Tech என்ற இந்திய நிறுவனம் தான் உலகிலேயே முதன் முதலாக Corona Virus இற்கு தடுப்பூசி (Covaxin) கண்டு பிடித்தது. இது எல்லோரும் அறிந்ததே. Covaxin என்ற தடுப்பூசியின் முதல் சோதனை எலி யார்? அவர்தான் பாரதப் பிரதமர் மேன்மைமிகு சத்ரபதி நரேந்திர தமோதரதாஸ் மோடி ஜி. 

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் பலர் தங்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை குறித்து நீண்டப் பதிவு ஒன்றைப் பரப்பி வருகின்றனர். அப்பதிவில், உலகில் முதல் முதலாக பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியினை கண்டுபிடித்தது அனைவரும் அறிந்த விஷயம் என குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement

மேலும், கோவாக்சின் தடுப்பூசியை விலங்குகளின் மீதான பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த பின்னர், மனிதர்கள் மீது பரிசோதிக்க யாரும் முன்வரவில்லை. அப்போது சிறிதும்  தாமதிக்காமல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தானாக முன்வந்து தன் மீது பரிசோதிக்க சொன்னார். 

இந்த நிகழ்வை விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்றும் மோடி கூறியதாக அந்த நீண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. அப்பதிவின் கடைசியில் “நன்றி : மோடியின் தேசம் குழு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ?

பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் பரப்பும் அப்பதிவிலுள்ள தகவல்களை ஆய்விற்கு உட்படுத்தினோம். கொரோனா வைரசுக்கு எதிராக உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசி கோவாக்சின் என அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து, இணையத்தில் கொரோனா வைரசுக்கான முதல் தடுப்பூசி எனத் தேடிப் போது, உலக சுகாதார நிறுவனம் 2020 டிசம்பர் 31ம் தேதி வெளியிட்ட கட்டுரையில், Pfizer/BioNTech கோவிட்-19 தடுப்பூசியே கொரோனாவிற்கு எதிராக முதல் தடுப்பூசியாக அவசரநிலையில் பயன்படுத்த அனுமதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நிறுவனங்களின் கண்டுபிடிப்பாகும்.

இதற்கு முன்பாக, 2020 ஆகஸ்ட் 11ம் தேதி ரஷ்யா நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிக்கு அதிபர் புதின் அனுமதி அளித்து இருந்தார்.

இந்த தகவல்களின்படி, கொரோனாவிற்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி கோவேக்சின் இல்லை என்பதை அறியமுடிகிறது.

அடுத்ததாக பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போல கோவாக்சின் முதன் முதலில் பிரதமர் மோடியின் மீது பரிசோதிக்கப்பட்டது குறித்துத் தேடினோம். 

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி ஆராய்ச்சி குறித்தான தகவல்கள் பாரத் பயோடெக் இணையதளத்தில் கிடைத்தது. கோவாக்சின் தடுப்பூசியினை 2020 ஜூலை மாதம் மனிதர்களின் மீது பரிசோதனை செய்யலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி, முதல் கட்டமாக 375 பேர் மீது, இரண்டாம் கட்டமாக 380 பேர் மீதும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்ட சோதனைகளில் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் மூன்றாம் கட்ட பரிசோதனையும் செய்துள்ளனர். இதில் 25,800 பேரினை பரிசோதித்துள்ளனர். அதனை தொடர்ந்து 2021 ஜனவரி 16ம் தேதி முதன் முதலில் கோவாக்சின் தடுப்பூசி பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.

முதல்கட்ட பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட 375 நபர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருக்கக்கூடும் என்ற எண்ணம் சிலருக்கு எழலாம். எனவே மோடி முதல் தவணையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து இணையத்தில் தேடினோம். 

பிரதமர் நரேந்திர மோடி முதல் தவணையாக கோவாக்சின் தடுப்பூசியினை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார் என தி இந்தியன் எஸ்பிரஸ் 2021 மார்ச் 1ம் தேதி செய்தி வெளியாகி இருக்கிறது.

உண்மை இவ்வாறாக இருக்க, கோவாக்சின் பரிசோதனைக்குப் பிரதமர் தன்னையே சோதனை எலியாக நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டார் என்றும், புராணக் கதைகளில் குறிப்பிடப்படும் கடவுளின் அவதாரங்களுடன் மோடியை ஒப்பிட்டும் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

முடிவு :

நம் தேடலில், உலகில் கொரோனாவிற்கு எதிராகத் தடுப்பூசியினை முதலில் இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டுபிடித்தது என்றும், அதனை முதன் முதலில் பிரதமர் மோடி மீதே பரிசோதனை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது உண்மை அல்ல எனத் தெரிய வருகிறது.   

பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்திக் கொண்டது 2021 மார்ச் 1ம் தேதி. கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களின் மீது பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது 2020 ஜூலை மாதம் என்பதையும் அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button