இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளே இல்லை என்றாரா பிரதமர் மோடி ?

பரவிய செய்தி

நம்மிடம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை, ஆகையால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம்… அவர்கள் (எதிர்கட்சிகள்) அதில் கவனம் செலுத்தவே இல்ல.. இப்போது கரும்பு உதவியுடன் எத்தனால் தயாரிக்கலாம். எங்களது அரசு எத்தனால் ஆலையின் வலையமைப்பை நிறுவுகிறது – உபி பஸ்தியில் பிரதமர் மோடி.

Twitter link | Archivelink 

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளே இல்லை , அதனால்  கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாகவும்  காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டியும் பேசியதாக முன்னணி செய்தி நிறுவனங்களாக ஏஎன்ஐ மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்டவை வெளியிட்டன.

Archive link 

இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளே இல்லை என பிரதமர் மோடி  பொய் கூறுகிறார் என இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் விவரங்கள் மட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பாக எண்ணெய் சுத்திகரிப்பில் ஆசியாவிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக மோடி பேசிய தகவலையும் இணைத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?

உத்தரப்பிரதேசத்தின் பஸ்தியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக பிப்ரவரி 27-ம் தேதி Abplive இந்தி மொழியில் செய்தி வெளியிட்டு இருந்தது. அதனை மொழிமாற்றம் செய்து பார்க்கையில், ” நம்மிடம் எண்ணெய் கிணறுகள் இல்லை, வெளியில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம் ” எனப் பேசியதாக இடம்பெற்று இருக்கிறது.

இதேபோல், பிசினஸ் ஸ்டான்டர்டு இந்தி பிரிவில் வெளியான செய்தியிலும், ” எண்ணெய் கிணறுகள் இல்லை ” என பிரதமர் மோடி பேசியதாகவே இடம்பெற்று இருக்கிறது.

தேசிய பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட பிரச்சார வீடியோவில் 39.40வது நிமிடத்தில் இருந்து மேற்படி பிரதமர் மோடி பேசியது இடம்பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க : எதற்காக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை.. விற்பனையாளர்களின் எச்சரிக்கை என்ன ?

உலகிலேயே எண்ணெய் இறக்குமதியில் இந்தியா 3வது பெரிய நாடாக இருந்து வருகிறது. நாட்டின் தேவையில் 85% வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டிற்கு எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என கரும்பு மூலம் கிடைக்கும் எத்தனாலை பெட்ரோலில் கலந்து பயன்பாட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது அதன் அளவு 10% ஆக இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என பிரதமர் மோடி பேசியதாக பரவும் தகவல் தவறானது. அவர் எண்ணெய் கிணறுகள் இல்லை எனப் பேசியதை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என தவறாக செய்தியில் வெளியிட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button