பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று. 2015ம் ஆண்டு அவர் அணிந்திருந்த உடையில் அவரது பெயர் மிக நேர்த்தியான முறையில் பார்ப்பதற்குக் கோடுகளைப் போன்று தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த உடை மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.
அதேபோல் பல்வேறு பகுதி மக்களின் கலாச்சார உடைகளையும் மோடி அணிந்துள்ளார். கடந்த காலங்களில் அவர் அணிந்த சில உடைகளின் தொகுப்பினை மேலே காணலாம்.
வித விதமா வேசம் போட்றதுலயே கவனமா இருக்காரு…விக்ரம ஓவர்டேக் பண்ணிருவாரு pic.twitter.com/aSCLrcKbrJ
— Schumy Vanna Kaviyangal (@Schumy_Official) April 6, 2023
இந்நிலையில் வித்தியாசமான உடையில் மோடி எடுத்துக் கொண்ட புதிய புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படத்தை சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் முதற்கொண்டு பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படம் குறித்து பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். அப்படி எந்த படமும் அவரது பக்கத்தில் பதிவிடப்படவில்லை.
AI Generated image of Shiri Narendra Mudi. pic.twitter.com/tLl19PUsfT
— Брат (@1nvinci6le) April 5, 2023
மேற்கொண்டு அப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அது AI (Artificial intelligence) மூலம் உருவாக்கப்பட்டது என ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. AI என்பது நாம் உள்ளீடு செய்யும் வார்த்தைகளைக் கொண்டு, அதற்குத் தகுந்த துல்லியமான படத்தை உருவாக்கும் திறன் கொண்டது.
இணையத்தில் Midjourney, DALL-E, Dreamstudio, DeepAI போன்ற பல AI தளங்கள் உள்ளன. நாம் உள்ளீடு செய்யக் கூடிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்டைல் அல்லது பேட்டனில் படங்களை AI அளிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் இவ்வகையான படங்களை ‘Paurush Sharma’ என்னும் யூடியூப் பக்கத்தில் காண்பித்து, அவை AI மூலம் உருவாக்கப்பட்டவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று AI உருவாக்கிய பல பிரபலங்களின் படங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக சில படங்கள் பரவியது. அவையும் AI மூலம் உருவாக்கப்பட்டவை.
மேலும், போப் பிரான்சிஸ் பார்ட்டியில் பெண்களுடன் குளியல் தொட்டியில் இருப்பது போன்றும்; டெஸ்லா CEO எலான் மஸ்கும் ஜெனரல் மோட்டார்ஸ் CEO மே பார்ராவும் டேட் செய்வது போன்றும்; மார்க் ஜுக்கர்பெர்க் மாடலாக இருப்பது போன்றும் AI படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
இந்தியத் தலைவர்களான ஜவர்ஹலால் நேரு, டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி எனப் பல தலைவர்களின் AI மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனப் பரவும் புகைப்படம் AI உதவியுடன் உருவாக்கப்பட்டது, அது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிகிறது.