பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என ஆஷ்லே டோஜே கூறியதாகப் பரவிய பொய் செய்தி !

பரவிய செய்தி

“பிரதமர் திரு.மோடிக்கு நோபல் பரிசு” இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர். அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக இவர் இருக்கிறார் – நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே கருத்து.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்வதற்கு தகுதியானவர், அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருக்கிறார் என நோபல் பரிசு குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கூறினார் என்றச் செய்தியை இந்திய ஊடகங்களும், பாஜகவினரும் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ? 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்வதற்கு தகுதியானவர் என நோபல் பரிசு குழுவின் துணைத் தலைவர் சொன்னதாக பரவும் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது விருது குழுவின் துணைத் தலைவரான ஆஷ்லே டோஜே அவ்வாறு கூறவில்லை என்பதை அறிய முடிந்தது.

இந்தச் செய்தி எவ்வாறு பரவியது எனத் தேடிய போது ICF அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆஷ்லே டோஜே டெல்லி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பின் சில ஆங்கில ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்துள்ளனர். நிகழ்ச்சியின் உரை மற்றும் பேட்டிகளுக்கு பிறகே பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனும் செய்தி பரவத் தொடங்கியுள்ளது.

அவர் அளித்த பேட்டிக் குறித்து தேடிய போது ANI-க்கு அளித்த பேட்டியில், நான் இந்தியாவிற்கு நோபல் பரிசு குழுவின் துணைத் தலைவராக வரவில்லை, ஒரு நண்பனாக வந்துள்ளேன். மேலும் அவர் கூறுகையில் பிரதமர் மோடிஇது போருக்கான காலம் அல்லஎன்று சொன்ன வார்த்தை எனக்கு நம்பிக்கை விதையாக இருக்கிறது என கூறியிருந்தார்.

Twitter link | Archive link 

ANIக்கு டோஜே அளித்த பேட்டியென ஊடகவியலாளர் ராணா அய்யூப், “எதை போலிச் செய்தி  என்கிறார்” என ட்விட்டரில் வெளியிட்டுள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில், இந்தியாவிற்கு நான் உலக அரசியல் மற்றும் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள வந்திருக்கிறேன். பொய்யான செய்தி மற்றும் ட்வீட் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த செய்தியில் இருப்பது போன்ற எதையும் நான் கூறவில்லை, போலி செய்தியை மேலும் பேசி அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த வீடியோவில் நெறியாளர் என்ன கேள்வி கேட்டார் எனும் காட்சி இடம்பெறவில்லை.

ஆஷ்லே டோஜே ABP செய்திக்கு அளித்த பேட்டியில் நெறியாளர், “பிரதமர் மோடி ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த தகுதியான தலைவரா?” என எழுப்பிய கேள்விக்கு, நீங்கள் ஒருவேளை பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளரா என்று கேட்கிறீர்கள். இது குறித்து எல்லோருக்கும் நான் ஒரே பதிலை சொல்லுகிறேன். அனைத்து நாடுகளில் உள்ள தலைவர்களும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பேட்டியில், “பிரதமர் மோடி ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என நினைக்கிறீர்களா?” என கேட்கும் கேள்விக்கு, மோடிக்கு சவாலான வேலை அளிப்பது என்னுடைய பணி அல்ல. உலகில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் அமைதிக்காக உழைக்க வேண்டும். பிரதமர் மோடி போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என பதிலளித்திருந்தார்.

Twitter link 

ABP செய்தியின் அரசியல் பிரிவு ஆசிரியரான அபிஷேக் உபாத்யாய் இந்த பேட்டியின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் போது, “பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக இருக்கக்கூடுமா? ” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் அளித்த இதர ஊடகப் பேட்டிகளிலும் இந்தியாவைப் பற்றியும், உலக அமைதியைப் பற்றியுமே பேசி உள்ளார்.

தி பிரிண்ட் ஊடகத்திற்கு ஐசிஎப் (ICF) தலைவர் வைபவ் உபாத்யாய் அளித்த பேட்டியில், ஆஷ்லே டோஜேவின் பேச்சை இந்திய ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளனர். நான் இதை பிழை எனக் கருதுகிறேன். ஆனால் இதுவே ஒரு செயல் திட்டமாக இருந்தால் அது குற்றம் எனப் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க : ‘மோடி நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்’ என அமெரிக்கா கூறியதாக பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் !

இதற்கு முன்பாக, பிரதமர் மோடி சொன்னதால் ரஷ்யா – உக்ரைன் போரை 6  மணி நேரம் நிறுத்தியதாகவும், மோடி நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும் என அமெரிக்கா சொன்னதாகவும் ஊடகங்களில் வெளியான பொய் செய்திகள் குறித்த உண்மைத்தன்மையை கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க: ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரம் இந்தியா நிறுத்தியதாக வதந்தி!

முடிவு :

நம் தேடலில் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்வதற்கு தகுதியானவர் மற்றும்  அதற்கான மிகப்பெரிய போட்டியாளராக இருக்கிறார் என நோபல் பரிசு குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாகப் பரவும் செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader