Fact Checkஅரசியல்இந்தியா

குழாய் நீர் பயனாளிகள்: லோக் சபாவில் 8 கோடி எனச் சொன்ன மோடி ராஜ்ய சபாவில் 11 கோடி எனச் சொன்னாரா ?

பரவிய செய்தி

பிப்ரவரி 8-ம் தேதி 8 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் தருவதாக மோடி கூறுகிறார். பிப்ரவரி 9 ஆம் தேதி, அதே மோடி 11 கோடி குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்! மோடி சுயமரியாதை இல்லாத பொய்யர் என்பதில் சந்தேகமில்லை.

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்ர்பர்க் அறிக்கை, மோடியின் குஜராத் பற்றிய பிபிசியின் ஆவணப்படம் என பல்வேறு விசயங்கள் குறித்து பதில் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் அழுத்தம் தரப்பட்டது. ஆனால், இவற்றை தவிர்த்தே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார்.

Advertisement

இந்நிலையில், பிப்ரவரி 8ம் தேதி மக்களவையில் பேசிய பிரதமர் மோடி நல் சே ஜல் திட்டத்தின் மூலம் 8 கோடி பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பு தந்ததாகக் கூறியவர், பிப்ரவரி 09ம் தேதி மாநிலங்களவையில் 11 கோடி பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்புக் கொடுத்ததாக கூறியுள்ளதாக பிரதமர் மோடி பேசும் இரு வீடியோக்கள் இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Tweet Link | Archive Link

பிரதமர் மோடி பேசும் வீடியோ பதிவை இந்திய தேசிய காங்கிரஸ் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 9ம் தேதி பதிவிட்டு விமர்சித்து இருந்தனர்.

உண்மை என்ன ? 

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் உரை சன்சாத் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில்(58வது நிமிடம்), ” சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்று நல் சே ஜல் திட்டத்தின் மூலம் 8 கோடி இணைப்புகளை வழங்கி உள்ளோம். தாய்மார்கள் மற்றும் பெண்கள் உங்கள் பொய்களை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ? ” எனப் பேசி இருக்கிறார்.

பிப்ரவரி 9ம் தேதி மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில்(13.13 நிமிடம்), ” இந்திய சுதந்திரத்தில் இருந்து எங்கள் அரசு அமைவதற்கு முன்பு வரை இந்த நாட்டில் 3 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் பெறப்பட்டன. கடந்த 3-4 ஆண்டுகளில், இன்று 11 கோடி வீடுகளுக்கு குழாய் நீர் கிடைக்கிறது ” எனப் பேசி இருக்கிறார்.

2014ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அளிக்கப்பட்ட 3 கோடி குடிநீர் குழாய் இணைப்பு எண்ணிக்கையையும் சேர்த்து தற்போது நாட்டில் மொத்தம் 11  கோடி பயனாளிகளுக்கு குடிநீர் கிடைப்பதாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசி இருக்கிறார். அந்த முழுமையாக பேச்சு இடம்பெறாமல், 11  கோடி பயனாளிகளுக்கு குடிநீர் கிடைப்பதாக பேசிய பகுதி மட்டுமே பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : Did PM Modi say different number of water connections provided in Lok Sabha and Rajya Sabha?

காங்கிரஸ் வெளியிட்ட பதிவு குறித்து நாம் ஆங்கிலத்திலும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதுகுறித்து மேற்காணும் இணைப்பில் படிக்கலாம்.

முடிவு : 

நம் தேடலில், பிப்ரவரி 8-ம் தேதி மக்களவையில் நல் சே ஜல் திட்டத்தில் 8 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் தருவதாக பேசிய மோடி, ஒரே நாளில் பிப்ரவரி 9 ஆம் தேதி மாநிலங்களவையில் 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்குவதாக பேசினார் எனப் பரவும் தகவல் தவறானது. மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய முழுமையான பகுதி இடம்பெறாமல் வீடியோ எடிட் செய்யப்பட்டு உள்ளது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button