பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக மேடையில் உரையாற்றும் 32 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
நரேந்திர மோடி மணைவி யசோதாபென் காங்கிரசில் இணைந்தார்… 👇 pic.twitter.com/dsdy9pGSI8
— Hyder🇮🇳 (@hyderali857685) January 31, 2022
உண்மை என்ன ?
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் திருமணம் மற்றும் மனைவி குறித்து குறிப்பிட்டு இருந்தார். இதன் பிறகே யசோதாபென் வெளியுலகிற்கு அறிமுகம் ஆனார். நரேந்திர மோடியுடன் நடந்த திருமணம் குறித்து பிபிசி செய்திக்கு யசோதாபென் பேட்டி அளித்து இருந்தார்.
முன்னாள் பள்ளி ஆசிரியரான யசோதாபென் எப்போதும் நரேந்திர மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானது. பிரதமரின் மனைவி யசோதாபென் காங்கிரசில் இணைந்ததாக எந்தவொரு அறிவிப்பும், செய்தியும் வெளியாகவில்லை.
யசோதாபென் மேடையில் பேசும் வீடியோ குறித்து தேடுகையில், 2017-ல் பிரதமர் மனைவி இந்தியில் பேசுவதாக பதிவான 2.30 நிமிட வீடியோவில் தற்போது பரப்பப்படும் பகுதி இடம்பெற்று இருக்கிறது
2017 ஜனவரியில் ராஜஸ்தான் மாநிலத்தில் கியான் மந்திர் கமிட்டியின் 50-வது ஆண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டக்கன் கோடா பகுதியில் அமைந்துள்ள கியான் மந்திர் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் போது புதிதாக கட்டப்படும் விடுதியின் பூமி பூஜையை யசோதாபென் செய்து வைத்தார் என ராஜஸ்தான் பத்திரிகையின் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
பள்ளி விழாவின் மேடையில், ” ரூ.500, ரூ.1000 நோட்டு ஒழிப்பால் கருப்பு பணம் வெளிவரும், சமையல் எரிவாயு இணைப்பு ” என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் யசோதாபென் பேசியதாக 2017 ஜனவரி 12-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் காங்கிரசில் இணைந்தார் எனப் பரவும் தகவல் தவறானது. பரப்பப்படும் வீடியோ கடந்த 2017-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் யசோதாபென் பேசிய போது எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.