பிரதமர் மோடிக்காக ரூ.8,500 கோடிக்கு வாங்கும் விமானத்தின் புகைப்படமா ?

பரவிய செய்தி
இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல.. மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம் ! பிரதமருக்காகத் தயாராகும் ” விண்வெளி வீடு “.. ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
” இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல.. மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம் ! பிரதமருக்காகத் தயாராகும் ” விண்வெளி வீடு “.. ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானங்கள் ” , ” மோடிக்காக வாங்கப்படும் சொகுசு விமானத்தின் விலை : 8,500 கோடி அவனவன் கொரோனாவில் சோறு இல்லாமல் செத்துகிட்டு இருக்கான். இதுல 8,500 கோடி ரூவாய்க்கு சொகுசு விமானம் கேட்குதா? சொகுசு விமானம்! ” போன்ற பல வாசகங்கள் உடன் மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சொகுசு விமானத்தின் புகைப்படம் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் கிழக்கு யூத் காங்கிரஸ் முகநூல் பக்கத்திலும் இப்புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்கள்.
பிரதமருக்கு வாங்கப்படும் விமானம் :
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய சமயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ” பிஎம் கேர் ” மூலம் திரட்டப்பட்ட நிதி குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகையில், இந்தியா புதிதாக வாங்க உள்ள விமானங்கள் உடன் “பிஎம் கேர் “-ஐ தொடர்புப்படுத்தி சில பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடிக்கு ரூ.8,500 கோடியில் வாங்க உள்ள விமானத்தின் உட்புறத் தோற்றம் என பகிரப்படும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015 நவம்பர் 10-ம் தேதி luxesocietas.com இணையதளத்தில் சொகுசு விமானத்தின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. இது பிரதமருக்காக வாங்க உள்ள பிரைவேட் விமானம் அல்ல, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானமாகும்.
2017-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி சாம் சுய் எனும் யூடியூப் சேனலில், போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் உட்புறத் தோற்றத்தை விவரிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அமெரிக்க நிறுவனமான போயிங் கமெர்சியல் ஏர்பிலேன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது வணிக பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சொகுசு விமானம்.
2019-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி இந்தியா டுடே செய்தியில், ” இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியயோர் போயிங் 747 விமானம் மூலம் பயணித்து வருகிறார்கள். அவர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு போயிங் 777 விமானங்களை வாங்க உள்ளனர். இவை 2020 ஜூலை முதல் பயன்படுத்தப்படும். இந்த விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்பதால் ஏர் இந்தியா விமானிகளுக்கு பதிலாக இந்திய விமானப் படையைச் சேர்ந்தவர்கள் இயக்குவார்கள் ” எனக் கூறப்பட்டு உள்ளது.
பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரின் பிரத்யேக பயன்பாட்டிற்கு வாங்கப்படும் விமானத்தின் விலை குறித்து தேடுகையில் 2020 பிப்ரவரி 3-ம் தேதி வெளியான பிசினஸ் டுடே செய்தியில், கடந்த பட்ஜெட் தாக்கலின் போது 810.23 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், கடந்த 2018-ல் இருந்தே நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், விமானம் வாங்க அரசு வழங்கும் நிதி குறித்து அரசு வெளியிடவில்லை. ஆனால், 1.18 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.8458 கோடி) அளவிற்கு செலவு ஏற்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது. செய்திகளில் வெளியான மதிப்பே சமூக வலைதளங்களில் வைரலாகியது.
வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் விமானத்தின் உட்புறத் தோற்றம் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் புகைப்படமாகும். இந்தியா வாங்குவது 2 போயிங் 777 ரக விமானங்கள். கொரோனா தொற்று காரணமாக போயிங் 777 விமானம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், விமானங்கள் செப்டம்பர் மாதத்தில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முடிவு :
நம் தேடலில், இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பயன்பாட்டிற்கு பிரத்யேகமாக இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் வாங்க உள்ளனர். ஆனால், பிரதமருக்காக வாங்கப்படும் விமானம் என பகிரப்படும் புகைப்படம் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் புகைப்படம் என தெரிந்து கொள்ள முடிந்தது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.