கல்வி உதவித்தொகை என பரவிய உயர் நீதிமன்ற உத்தரவு எண் எதைக் குறிக்கிறது ?

பரவிய செய்தி

10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் புதிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. இதற்கான உயர் நீதிமன்ற உத்தரவு எண் WP (MD) NO: 20559/2015.

மதிப்பீடு

சுருக்கம்

பிரதமரின் சார்பில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் ஒன்று உள்ளது. எனினும், புதிய திட்டம் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.

விளக்கம்

பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் புதிய கல்வி உதவித்தொகை ஒன்றை அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பில் 75% சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், 12-ம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான உயர் நீதிமன்ற உத்தரவு எண் WP (MD) NO: 20559/2015.

Advertisement

இதுபோன்ற செய்திகள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் காணப்படுகிறது. அதிலும், பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவு வெளியாகிய நேரங்களில் வைரலாகி விடுகிறது. இதை உண்மை என நினைத்து பல பெற்றோர்கள் முயற்சித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த புரளியில் கூறியுள்ளவற்றை விவரமாக காண்போம்.

உயர் நீதிமன்ற உத்தரவு எண் :

பிரதமரின் புதிய உதவித்தொகை வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த உயர் நீதிமன்ற உத்தரவு எண் WP (MD) NO: 20559/2015 என்று குறிப்பிட்டுள்ளனர்.

WP (MD) NO: 20559/2015 என்ற உத்தரவு எண், தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடுக்கான ஆணையாகும். இந்த ஆணை 1-1-2016 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்தனர். மேலும், ஆண், பெண் என இருவரும் அதில் குறிப்பிட்ட உடைகளை தவிர்த்து ஆபாசமாக உடை அணிந்து வந்தால் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்து கோவில் ஆடைக் கட்டுப்பாடு உத்தரவை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு எண் என மாற்றியுள்ளனர்.

Advertisement

அப்துல்கலாம் கல்வி உதவித்தொகை :

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஐயா அப்துல்கலாம் பெயரில் டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமியா என்ற மத்திய பல்கலைக்கழகத்தில் 2015-2016 கல்வியாண்டில் 50 மாணவர்களுக்கு உதவித்தொகை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்கள் போன்ற குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே ஆண்டுதோறும் ஊக்கத்தொகையானது இப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் :

பிரதமர் பெயரில் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் தகுதியான மாணவர்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2000 ரூபாயும், மாணவிகளுக்கு 2250 ரூபாயும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க இயலும்.

மாணவர்களின் கல்விக்காக அரசு மற்றும் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் கல்வி உதவித்தொகை வழங்கி உதவி புரிந்து வருகின்றன. எனினும், சில சமயங்களில் தவறான செய்திகளும் பரவி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து விடுகிறது .

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button