PMJJBY, PMSBY கீழ் கோவிட்-19 மரணங்களுக்கு இன்சூரன்ஸ் பெறலாமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
தயவுசெய்து மிக முக்கியமான அறிவிப்பைக் கவனியுங்கள்: நெருங்கிய உறவினர்/நண்பர்கள் வட்டத்தில் யாரோ ஒருவர் கோவிட்-19 காரணமாக அல்லது வேறு ஏதோ காரணத்தினால் இறந்து விட்டால், நிதியாண்டின் 01-04 முதல் 31-03 வரை கணக்கு அறிக்கை அல்லது பாஸ்புக் என்ட்ரியை வங்கியிடம் கேளுங்கள். ரூ.12 /- அல்லது ரூ.330/- எனும் என்ட்ரியைக் கவனிக்கவும், அதை குறிக்கவும். வங்கிக்கு சென்று இன்சூரன்ஸ் தொகை ரூ.2,00,000 க்ளைம் செய்யுங்கள்.
* 2015 ஆம் ஆண்டில், அனைத்து வங்கிகளின் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்திய அரசு இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கியது: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ரூ.330 ஆகவும், பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா (PMSBY) ரூ.12 ஆகவும். 2 லட்சம் ரூபாய். நம்மில் பலர் இந்த படிவத்தை பூர்த்தி செய்திருக்கலாம். பிரீமியம் 31/05 அன்று அவர்களின் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும். இந்த செய்தியை அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பரப்புங்கள். ரூ.2,00,000 /- என்பது எங்கள் மக்களுக்கு ஒரு சிறிய தொகை அல்ல. தங்கள் உறுப்பினரை இழந்த குடும்பத்திற்கும்.
மதிப்பீடு
விளக்கம்
PMJJBY, PMSBY ஆகிய இரு இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் கோவிட்-19 அல்லது பிற காரணங்களால் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை கிடைப்பதாக ஓர் தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கோவிட்-19 இறப்புக்காக PMJJBY கீழ் இழப்பீடு கோரப்படலாம் என்றாலும், அதுவும் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னரே. ஆனால் PMSBY கீழ் கொரோனா இறப்புக்கள் கவர் செய்யப்படவில்லை.
2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன் தன் – ஜன் சுரக்சா யோஜனா கீழ் இரு திட்டங்களை தொடங்கினார். இது சேமிப்பு வங்கி கணக்குகளைக் கொண்ட நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு மலிவு விலையில் சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) :
பிரதான் மந்திரி சீவன் ஜோதி பீமா யோஜனா ஆனது ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வகையில் லைஃப் இன்சூரன்ஸை மிகக் குறைந்த பிரீமியத்தில் ரூ.330க்கு வழங்குகிறது. இத்திட்டம் ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு ரூ.2 லட்சம் கவர் வழங்குகிறது. திட்டத்தின் கீழ் எந்தவொரு காரணத்தினாலும் ஏற்படும் இறப்புகளுக்கு க்ளைம் செட்டில் செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த திட்டத்திற்கு தானாகவே விண்ணப்பிப்பவர்களின் சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து ரூ.330 டெபிட் செய்யப்படும். இதில், கோவிட்-18 இறப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 18-55 வயதுக்கு இடையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் யாரும் விண்ணப்பிக்கலாம்.
55 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து கோவிட்-19 ஆல் இறந்தால் இந்த திட்டம் பயனளிக்காது. இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரும் மக்கள் தங்கள் க்ளைமை அந்தந்த வங்கிகளில் 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா (PMSBY) :
அடுத்து, பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா கீழ் விபத்து மரணங்கள் அல்லது நிரந்தர இயலாமை போன்றவையின் போதே இன்சூரன்ஸ் தொகை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் கோவிட்-19 உயிரிழப்புகள் விபத்து மரணங்களாக கருதப்படவில்லை. ஆகையால், இத்திட்டத்தின் கீழ் கோவிட்-19 இறப்புகளுக்கு இன்சூரன்ஸ் பெற முடியாது.
முடிவு :
நம் தேடலில், 2 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகையானது பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் கீழ் தானாக இணைந்த 18-55 வயதுடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில், கோவிட்-19 மரணமும் இடம்பெற்று இருக்கிறது.
பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்துகளுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும், கோவிட்-19 மரணங்களுக்கு அல்ல என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.