பாமக எம்எல்ஏ ரூ.2000 தருவதாக போலி போஸ்டர்.. போலி டோக்கன் திமுக பிரமுகர் கொடுத்ததாக போலிச் செய்தி !

பரவிய செய்தி

பாமகவின் மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனுக்கு ரூ.2000/- வழங்கப்படுகிறது.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சேலம் மேற்கு தொகுதியின் பாமக எம்எல்ஏ தேர்தலின் போது வழங்கப்பட்ட மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனுக்கு 2,000 ரூபாய் வழங்குவதாக வெளிப்படையாக அறிவித்ததாக ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக எம்எல்ஏ அருள் ராமதாஸ் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் கூடிய அந்த போஸ்டரில், ” தேர்தல் நேரத்தில் மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கன்களை தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்கினேன். நான் கொடுத்த வாக்குறுதிப்படி அருள் ராமதாஸ் ஆகிய என்னை மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்தீர்கள். அந்த நன்றி உணர்வோடு, மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனை வைத்திருக்கும் நபர்கள் என் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ நேரில் வந்து கொடுத்து விட்டு மளிகை பொருட்கள் வாங்க ரூ.2000 பெற்றுக்கொள்ளலாம் ” எனக் கூறப்பட்டுள்ளது

Advertisement

Archive link

Archive link 

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகவே அரசியல் கட்சிகள் தரப்பிலும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா எனக் குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் போஸ்டர் குறித்து சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் ராமதாஸ் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இது போலியானது. அப்படி எந்த டோக்கனும் வழங்கவில்லை. அவதூறுகளுக்கு பதில் அளிக்க முடியாது ” எனத் தெரிவித்து இருந்தார்.

Archive link 

மேலும், வைரல் செய்யப்படும் போஸ்டர் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் பாமக எம்எல்ஏ புகார் மனு அளித்துள்ளார். அதில், ” சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற என் மீது வேண்டுமென்றே நான் டோக்கன் விநியோகித்ததாகவும், அதற்கு பணம் தருகிறேன் என நான் அழைத்ததாகவும் கூறி நேற்று(08.06.2021) முதல் முகநூல், வாட்ஸ்அப்பில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. நான் அதுபோல் டோக்கனோ, பணம் கொடுக்கிறேன் எனவோ எப்போதும் சொன்னதில்லை. எனது வெற்றியை பொறுக்க முடியாதவர்கள் இதுபோன்ற பொய்யை பரப்பி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு எனது பெயருக்கும், பதவிக்கும், எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ” என இடம்பெற்று இருக்கிறது.

Archive link  

இதையடுத்து, ” ஓட்டுக்கு 2000 தருவதாக போலியான மாம்பழம் சின்னம் அச்சிட்ட டோக்கன் விநியோகித்த சேலம் மாவட்ட திமுக பிரமுகர்கள் 4 பேர் கைது ! திமுக அலுவலகத்தை முற்றுகையிட்ட சேலம் மேற்கு தொகுதி பெண்கள் ” என பெண்கள் டோக்கன் உடன் இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானதாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த செய்தி ஸ்க்ரீன்ஷார்ட் பாமக ஆதரவாளர்கள் தரப்பில் பதிவிடப்பட்ட 3 பதிவுகள் எம்எல்ஏ அருள் ராமதாஸ் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.

சேலம் திமுக பிரமுகர்கள் மாம்பழம் சின்னம் பொறித்த போலி டோக்கன்களை விநியோகித்தது தொடர்பாக  நியூஸ்7 தமிழ் இப்படியொரு செய்தி வெளியிட்டதா என தேடுகையில், அப்படி எந்தவொரு செய்தியும், பதிவும் இடம்பெறவில்லை. ஸ்க்ரீன்ஷார்ட்டில் எழுத்துக்களின் வரிசையும், டேக் உள்ளிட்டவை நியூஸ் 7 தமிழ் உடைய பதிவுகளில் உள்ளதை போன்று இல்லை.

இதுதொடர்பாக, நியூஸ் 7 தமிழ் உடைய டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இது போலிச் செய்தியே. நாங்கள் வெளியிடவில்லை ” என பதில் அளித்து இருந்தனர்.

முடிவு :

நம் தேடலில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கன்களுக்கு ரூ.2000 வழங்குவதாக பரப்பப்படும் போஸ்டர் போலியானதே. அது தொடர்பாக எம்எல்ஏ தரப்பில் மறுப்பும், புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், போலியான டோக்கன்களை சேலம் திமுக பிரமுகர்கள் விநியோகித்ததாக நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி ஸ்க்ரீன்ஷார்ட் கூட போலியானது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button