பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியத்திற்கு காங்கிரஸ் தலைவர் ட்ரஸ்டியா ?

பரவிய செய்தி

உங்களுக்கு தெரியுமா ? நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி நிவாரண நிதியத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் நிரந்தர ட்ரஸ்டி. இதனால் தான் கோவிட்-19க்கு பிஎம் கேர் உருவாக்கினார்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் பொருட்டு தேச மக்கள் நிதியுதவி அளிக்குமாறு ” PM Care ” அறக்கட்டளை புதிதாக உருவாக்கப்பட்டது. பிஎம் கேர் தொடங்கிய தருணத்தில் ஏற்கனவே பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி இருக்கும் பொழுது எதற்காக தனியாக ஒன்றை உருவாக்கி உள்ளீர்கள் என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், 1948-ம் ஆண்டு நேருவால் உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி (PMNRF) அமைப்புக்கு ட்ரஸ்டி ஆக காங்கிரஸ் தலைவர் சேர்க்கப்ட்டுள்ளார். PM Care  போல் அல்லாமல் இப்போதைய பிரதமர் நிவாரண நிதி பயன்படுத்த காங்கிரஸ் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், புதிதாக துவங்கப்பட்ட PM Care நிதியை பயன்படுத்த மோடி , நிதி மந்திரி, ராணுவ மந்திரி மற்றும் உள்துறை மந்திரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதனால் தான் மோடி கோவிட்-19-க்கு PM Care உருவாக்கினார் ” என ஓர் மீம் பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

1948-ல் நேரு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி அறக்கட்டளையை உருவாக்கும் பொழுது காங்கிரஸ் தலைவர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், டாடா அறக்கட்டளையின் பிரதிநிதி உள்ளிட்ட பலரும் இடம்பெற்று இருந்தனர். இந்திய அரசியலமைப்பு சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நிவாரண நிதிக்கான அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆனால், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது 1985-ல் தேசிய நிவாரண நிதி அறக்கட்டளையில் இருந்த பொறுப்பாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டு நிர்வகிக்கும் அதிகாரத்தை முழுமையாக பிரதமரின் கைவசம் மாறியது. அதன்பிறகு தற்போது வரை பிரதம மந்திரி நிவாரண நிதியை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதமரிடம் உள்ளது.

Advertisement

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தேடுகையில் அதற்கான பதிலை காண முடிந்தது.

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆராய்கையில், அமைப்பின் தலைவராக இருப்பது இந்திய பிரதமரே எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ட்ரஸ்டியாகவோ அல்லது அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றோ என எங்கும் இடம்பெறவில்லை. அந்த முறை ராஜீவ் காந்தி காலத்திலேயே நீக்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை, PMNRF ஓர் காங்கிரஸ் தலைவரை கொண்ட ட்ரஸ்ட் ஆக இருந்தால் அந்த முறையை நீக்கி விட்டு முழு அரசு கட்டுப்பாட்டில் மாற்ற மத்திய ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும். இந்த நிதியத்தில் இருந்தே தேசிய அளவில் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு நிவாரணங்கள் வழங்குவது வழக்கமாகும்.

தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் பிரதம மந்திரி நிவாரண நிதி அறக்கட்டளைக்கு பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் பிஎம் கேர் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், ” பிரதமர் பிஎம்என்ஆர்எஃப் ஏன் பிஎம்-கேர்ஸ் என்று மறுபெயரிடக்கூடாது ” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளர், ” இது பிஎம்என்ஆர்எஃப் போலவே நிர்வகிக்கப்படும் மற்றும் சிறு நன்கொடைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். இதன் நோக்கம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், பல்வேறு முனைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும், அனைத்து வளங்களையும் வழிநடத்துவதே ஆகும். இது கூட்டு நடவடிக்கைக்கான அழைப்பு மற்றும் இதுபோன்ற நிலை ஏற்பட்ட போதெல்லாம் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தாராளமாக நன்கொடை அளித்துள்ளனர் என்பதை எங்கள் அனுபவம் காட்டுகிறது ” எனக் கூறினார்.

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, PMNRF-க்கு காங்கிரஸ் தலைவர் நிரந்தர ட்ரஸ்டி என தவறான தகவலை அரசியல் சார்ந்து பரப்பி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் நிரந்தர ட்ரஸ்டி என்பதால் புதிதாக பிஎம் கேர் உருவாக்கப்பட்டது என்பதும் தவறானது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close