நீரவ் மோடியின் முறைகேடு ரகுராம் ராஜன் காங்கிரசிற்கு எச்சரிக்கை விடுத்தாரா ?

பரவிய செய்தி
நீரவ் மோடியின் ஊழல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரிடம் எச்சரிக்கை விடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை அமைதியாகவும், 2014 வரை வங்கி கடன்களை பெற அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்தினர். எனவே, இப்போது தெரிய வந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து என்னை ஏன் குற்றம் சுமத்த வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நீரவ் மோடி குறித்து எச்சரிக்கை விடுத்தார் என்பதற்கு எந்தவொரு நம்பத்தகுந்த ஆதாரங்களும் இல்லை.
விளக்கம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி அளவிற்கு முறையற்ற பண பரிவர்த்தனை மற்றும் கடன் பெற்றது என்று மிகப்பெரிய ஊழல் சம்பவத்தை நிகழ்த்திய நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். ஆகையால், இவ்விவகாரம் குறித்து அரசு ஏன் முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தனது பதவி காலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் முறையற்ற நிதிநிலை குறித்து ராகுல் காந்தி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார் என்று தவறான கருத்துகளுடன் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறது.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ரகுராம் ராஜன், நீரவ் மோடியின் 11,400 கோடி ஊழல் விவகாரம் தலைப்பு செய்தியாக தொடங்கியதில் இருந்து ஊடகத்தில் எத்தகைய பேட்டியும் அளிக்கவில்லை.
இருப்பினும், ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்துகள் என்று கூறி வலைத்தளங்களில் தவறான கருத்துகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ரகுராம் ராஜன் கூறியதாக பரவும் கருத்தை தேடினால், அது தொடர்பாக மீம்கள், வலைத்தள பதிவுகள் மட்டுமே வருகின்றன. ஆனால், ஊடகத்திலோ அல்லது அவரின் வலைத்தள பக்கத்திலோ இடம்பெற்றதாக எந்த ஒரு பதிவும் இல்லை.
முந்தைய ஆட்சியில் இருந்த கட்சியை பற்றி பொறுப்பில் இருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய வார்த்தைகள் அரசியல் சண்டையை உருவாக்கும் விதத்தில் இருந்துள்ளது. இதற்கு ஆளும் மத்திய பாஜக அரசு ஆதரவு அளித்து அதிகம் வைரலாக்கி இருப்பர். ஆனால், அரசின் தரப்பில் இதற்கு எந்தவொரு எதிர்வினையும் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி 2004-2014-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எந்தவொரு அமைச்சர் பதிவிலும் இல்லை. ஆக, வங்கி ஊழல் குறித்து ஒரு கட்சியின் தலைவரிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் எவ்வாறு எச்சரிக்கை செய்வார். அதற்கு, அவர் ஊடகம் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தால் மிகப்பெரிய சர்ச்சையாக உருவாகி இருக்கும் அல்லவா!!
இறுதியாக, ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்து என்று பரவிய பதிவில், Former-க்கு பதிலாக EX.Governors மற்றும் Frauds என்று எழுத்து பிழையும் உள்ளன.
மேலும், 2014-ல் காங்கிரஸ் ஆட்சி முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு நீரவ் மோடிக்கு ஆதரவாக நகை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து, 80:20 திட்டத்தை அனுமதித்ததாக சில வலைத்தள பக்கங்களில் கூறியுள்ளனர். பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான காங்கிரஸ் ஆட்சி என்பது உண்மை எனினும் இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை .
இவற்றை மையமாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுனருமான ரகுராம் ராஜன் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் விவகாரத்தில் முந்தைய அரசை குற்றம்சாட்டினார் என்று பரவுவதை வதந்திகள் என்று அறிந்து கொள்ள முடிகிறது.