தீபாவளி பட்டாசு தடை, 8 வழிச் சாலை, மாநகராட்சி வாகன ரிப்பேர் ரூ.51 கோடி.. Poli Talk’s வீடியோவில் பேசிய வதந்திகள் !

பரவிய செய்தி

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது எனச் சட்டம் போடப்பட்டுள்ளது. நாம் வேண்டாம் எனச் சொன்ன 8 வழிச் சாலையை நாமே போடுகிறோம். வண்டியை ரிப்பேர் செய்ய 51 கோடிக் கணக்கு எழுதி உள்ளோம். 

மதிப்பீடு

விளக்கம்

Poli Talk’s எனும் யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றினை பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தங்களில் சமூக வலைத்தள பக்கங்களில் வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

அதில், ஆளுங்கட்சி தலைவர் ஒருவரிடம் இரண்டு தொண்டர்கள் பேசுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படிப் பேசுகையில் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது எனச் சட்டம் போட்டுள்ளோம். சென்ற ஆட்சிக் காலத்தின் போது நாம் வேண்டாம் எனச் சொன்ன 8 வழிச் சாலையை, தற்போது நாமே போட்டுக் கொண்டு இருக்கிறோம். மேலும், வாகன பழுது பார்ப்பு செலவுக்கு 51 கோடி செலவு செய்ததாக மதுரை மாநகராட்சி வரவு செலவு குறித்துப் பேசி இருக்கின்றனர்.

உண்மை என்ன ?

பட்டாசு வெடிப்பதினால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு பசுமை பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யவும், பட்டாசு தயாரிக்கும் மூலக்கூறுகளில் மாசு அளவைக் குறைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியது.

மேலும், மக்களிடையே பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கவும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

அதன் அடிப்படையில் முதன் முதலில் 2018ம் ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அப்போது அதிமுக அரசு தமிழ்நாட்டினை ஆட்சி செய்து கொண்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தீபாவளி பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேரக் கட்டுப்பாட்டிற்கும், பட்டாசு வெடிக்க கூடாது என சட்டம் போடப்பட்டுள்ளது என கூறுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. உச்ச நீதி மாற்றத்தின் அறிவுறுத்தலில் படி விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டினை தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறாகப் பேசியுள்ளனர்.

8 வழிச் சாலை :

அதற்கடுத்ததாக அந்த வீடியோவில் 8 வழிச் சாலை குறித்துப் பேசியுள்ளனர். 2018ம் ஆண்டு  சேலம் 8 வழிச்சாலை திட்டத்தினை ஒன்றிய பாஜக அரசு அறிவித்து, அதனைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அதிமுக அரசு முயன்றது. இத்திட்டம் குறித்து ஆரம்பக் காலத்தில் திமுக மாற்றுப்பாதை, மாற்று வழி என்ற கருத்தினையே முன்வைத்தது. பின்னர், 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என திமுக தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டது. 

மேலும் படிக்க : 8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக கூறவே இல்லையா ? பொய் சொல்லலாமா அமைச்சரே !

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக சொல்லவே இல்லை, எனப் பேசியது கடும் விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், சாலை போடுவதற்கான பணிகள் எதுவும் இதுவரையில் நடைபெறவில்லை. இந்நிலையில் 8 வழிச் சாலையை திமுக செயல்படுத்தியதாக (போடுவதாக) வீடியோவில் பேசியுள்ளது தவறான தகவலாகும். 

வாகன பராமரிப்பு செலவிற்கு 51 கோடி : 

இதே போல மதுரை மாநகராட்சி வாகன பராமரிப்பு செலவிற்கு 51 கோடி எனப் பேசியுள்ளனர். அது 2015-16 முதல் 2019-20 வரையான நிதியாண்டில் செய்யப்பட்டுள்ள செலவினமாகும். அப்போது ஆட்சியிலிருந்தது அதிமுக அரசாகும். 

மேலும் மதுரை மாநகராட்சியின் வாகன பழுது பார்ப்பு செலவினம் மற்றும் அது செலவு செய்யப்பட்ட காலக்கட்டம் குறித்த உண்மைத்தன்மையினை யூடர்ன் முன்பே கட்டுரை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க : மாநகராட்சியில் வாகன ரிப்பேர் செலவு ரூ51.64 கோடி.. அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக எனப் பரப்பும் அதிமுக, பாஜகவினர்.

முடிவு:

நம் தேடலில், Poli talk’s வீடியோவில் திமுக அரசு தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கத் தடை எனக் கூறியது தவறான தகவலாகும். மாசு கட்டுப்பட்டு வாரியம்  உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி 2018ம் ஆண்டு முதல் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டினையே விதித்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. அதே போல், 8 வழிச் சாலை போடும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. 

மேலும், மதுரை மாநகராட்சி வாகன பழுது பார்க்க 51 கோடி செலவு என்பது 2015-16 முதல் 2019-20 நிதியாண்டில் செய்யப்பட்ட செலவினமாகும். அப்போது தமிழ்நாட்டினை ஆட்சி செய்தது அதிமுக என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader