டிராக்டரை துரத்தும் போலீஸ்.. கெத்துக்காட்டிய விவசாயி எனப் பரவும் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி
போராட்டத்திற்கு போகவிடாமல் டிரக்டரை முடக்க நினைத்த போலீஸ் தனி ஒருவனாக கெத்துகாட்டி சென்ற விவசாயி.
மதிப்பீடு
விளக்கம்
ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு செல்ல விடாமல் தடுக்க நினைத்த உத்தரப் பிரதேச போலீசிற்கு தனி ஒருவனாக கெத்துக்காட்டிய விவசாயி என்கிற நிலைத்தகவல் உடன் 1.37 வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆற்றுப் பகுதியில் டிராக்டர் ஒன்றை போலீஸ் வாகனம் துரத்திக் கொண்டே செல்லும் வீடியோ ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
உத்தரப் பிரதேச போலீஸ் டிராக்டரை துரத்திச் செல்வது தொடர்பான கீவார்த்தைகளை கொண்டு தேடுகையில், ” உத்தரகாண்ட் போலீஸ் மணல் கடத்தல் மாஃபியாவை துரத்திக் கொண்டு செல்லும் காட்சியென ” இதே வீடியோவை 2021 ஜனவரி 25-ம் தேதி ABP Asmita எனும் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
Amarujala எனும் செய்திதளத்தில் ஜனவரி 22-ம் தேதி வெளியான செய்தியில் டிராக்டரை போலீசார் துரத்தும் தெளிவான வீடியோ மற்றும் போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவல் இணைக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில் கோசி எனும் ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை போலீசார் துரத்திய போது எடுக்கப்பட்ட வீடியோவே இது.
மேலும் படிக்க : காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியக் கொடியை அவமதிக்கும் வீடியோ இந்தியா இல்லை !
ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு சில நாட்களுக்கு முன்பே இவ்வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால், விவசாயி டிராக்டர் பேரணிக்கு செல்லும் விவசாயியை உத்தரப் பிரதேச போலீஸ் தடுக்க நினைத்த போது எடுக்கப்பட்ட வீடியோ என தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், போராட்டத்திற்கு போகவிடாமல் டிராக்டரை முடக்க நினைத்த உத்தரப் பிரதேச போலீஸ் என வைரலாகும் வீடியோ தவறானது. அது உத்தரகாண்ட் மாநிலத்தில் மணல் கடத்தல் செய்த டிராக்டரை போலீஸ் துரத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.