காவலருக்கு கொரோனா தாக்கிய வீடியோவா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்களில் தொடர்ந்து பணியில் இருக்கும் காவல்துறையைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக செய்திகளின் வாயிலாக காண முடிகிறது. இந்நிலையில், காவலரைத் தாக்கிய கொரோனா வைரஸ் என ஓர் வீடியோ முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முத்துப்பேட்டை முகைதீன் என்பவரின் முகநூல் பக்கத்தில் பதிவான 2 நிமிட வீடியோவில், ” இருமிக் கொண்டே வரும் காவலர் கீழே விழுந்த பிறகு அங்கு வரும் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அவருக்கு மாஸ்க் அணிவித்து ஸ்ரேக்ட்சரில் தூக்கிக் கொண்டு செல்வது ” இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கண்டுள்ளது.
இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வரும் வீடியோவில் இருக்கும் காவலரின் நடவடிக்கை பார்ப்பதற்கு நடிப்பது போன்று இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தது போன்று மாதிரி வீடியோ ஏதும் காவலர்கள் தரப்பில் செய்து இருக்கக்கூடும் என தோன்றியது. ஆகையால், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் இடம் சிறைச்சாலைப் பகுதி போல் இருக்கிறது. வீடியோ குறித்து தொடர்ந்து தேடுகையில், ஏப்ரல் 12-ம் தேதி Inquilabi Hindustani Live எனும் யூடியூப் சேனலில் ” பீகார் மாநிலத்தின் ஹஜிப்பூர் சிறைச்சாலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டார் (பயிற்சி வீடியோ) ” என தலைப்பிட்டு வெளியாகி இருக்கிறது. எனினும், வீடியோ குறித்த கூடுதல் தகவல்கள் இல்லை. தமிழில் 2 நிமிட வீடியோவே வைரலாகி உள்ளது, ஆனால் உண்மையான வீடியோ மொத்தம் 6.27 நிமிடம் கொண்டது.
வீடியோ குறித்து மேற்கொண்டு தேடிய பொழுது ஏப்ரல் 12-ம் தேதி நியூஸ் 18 ஹிந்தி செய்தியில், ஹஜிப்பூர் சிறைச்சாலையில் காவலர் மற்றும் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது போல் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் தவறாக பரவிவருவதாக யூடியூப் சேனலில் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன்பாக கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வீடியோ இந்தியாவில் தவறான தகவல் உடன் பரவி இருந்தன என்பதை நாம் கண்டறிந்து வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : கொரோனா பாதித்தவர்களை நாய் போல் பிடிப்பதாக வைரலாகும் வீடியோ ?| உண்மை என்ன ?
நம்முடைய தேடலில் இருந்து, பீகாரில் உள்ள சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் பாதித்த காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பது போல் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வீடியோவை காவலருக்கு கொரோனா பாதித்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.