“காவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்” – டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை.

பரவிய செய்தி
காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் , கடித பரிமாற்றம் , உள்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் . போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில் , ” காவல் துறை ” என இடம்பெற்றிருக்க வேண்டும் . வருகைப் பதிவேட்டில் அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் – தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் அரசுத்துறைகளில் பெரும்பாலும் ஆங்கில மொழியை பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அதில், மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தில் தமிழக காவல்துறையில் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக காவலர்கள் கையெழுத்திடுவது, அனைத்து விதமான பதிவேடுகள், கடிதத் தொடர்பு என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி ஜே.கே திரிபாதி வெளியிட்டு இருந்தார்.
20.11.2019 அன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ,
” தமிழ் வளர்ச்சித் துறை இயக்கம் நவ. 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை, பணியாளர்களைத் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு , முன் கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்து பதிவுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் என்றும் , வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட வேண்டும் எனவும் , அனைத்து வரைவு கடிதத் தொடர்புகளும் , குறிப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டுமெனவும் , மேலும் அனைத்து காவல் வாகனங்களுக்கும் தமிழில் ” காவல் ” என்று இடம்பெற்றிருக்க வேண்டுமெனவும் , அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர்ப் பலகையும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர் .
மேற்கண்ட பொருள் தொடர்பாக தலைமை அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும் , பிற காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் “.
தமிழ் மொழியின் வளர்ச்சி தொடர்பான அனைத்து காவலர்களும் தமிழில் கையெழுத்திட வேண்டும் , காவல்துறை வாகனங்களில் காவல் என தமிழில் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை சமூக வலைதளங்களிலும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.