பெங்களூரில் பாகிஸ்தான் கொடி என நினைத்து முஸ்லீம் லீக் கொடியை அகற்றிய போலீஸ் !

பரவிய செய்தி
பாகிஸ்தான் கொடியை காரில் ஏற்றி வந்த தமிழக காரை நிறுத்தி நமது தேசிய கொடியை ஏற்றிய கர்நாடக காவலர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தான் நாட்டின் கொடியை காரில் ஏற்றி வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி நமது நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய கர்நாடக காவலர்கள் என 43 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகியதால் தமிழக செய்திகளில் கூட இதுகுறித்து வெளியாகி இருக்கிறது.
மாலைமலர், தந்திடிவி உள்ளிட்ட செய்திகளில், ” பெங்களூரின் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே வீரசந்திரா பகுதியில் எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தமிழ்நாட்டில் இருந்து ஒரு கார் பெங்களூர் நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கவனித்த போக்குவரத்து போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் வந்த 2 பேரிடம் பாகிஸ்தான் கொடியை கட்டியது பற்றி கேட்டனர். ஆனால், அவர்கள் சரியாக பதில் எதுவும் சொல்லவில்லை.
இதையடுத்து இதுபோன்று பாகிஸ்தான் கொடியை கட்டி வரக்கூடாது என்று 2 பேருக்கும் போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர் இந்திய தேசியக் கொடியை காரின் முன்பகுதியில் பொருத்திய போலீசார் அங்கிருந்து காரை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் போக்குவரத்து போலீசாரின் தேசப்பற்றுக்கு லைக் தெரிவித்து வருகின்றனர் ” என வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் காரின் முன்பகுதியில் இருந்தது பாகிஸ்தான் நாட்டின் கொடி என தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் முஸ்லீம்கள் லீக் கட்சி மற்றும் முஸ்லீம் அமைப்புகள் என பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கொடி பச்சை நிறத்தில் பிறை நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடியே.
வைரல் வீடியோவில் இருப்பது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கொடி. பாகிஸ்தான் நாட்டின் கொடியில் இடதுபுறத்தில் வெள்ளை நிறம் இடம்பெற்று இருக்கும். வைரல் வீடியோவில் அவ்வாறு இல்லை.
பாகிஸ்தான் கொடிக்கும் இந்தியாவில் உள்ள கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா, தனிநபர்களின் காரில் தேசியக் கொடியை வைப்பது தவறானது என்றும் செய்தியின் கமெண்ட்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க : கேரள கல்லூரியில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்களா ? ஊடக செய்தியால் பரபரப்பு.
இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டின் கொடி பறப்பதாக தவறான செய்திகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாகவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் கொடியை பாகிஸ்தான் கொடி என சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : பச்சைக் கொடியினாலே பாகிஸ்தான் தானா ? | ராஜஸ்தான் ஊர்வல வதந்திகள்.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தான் கொடியை மாட்டி வந்த தமிழக காரை நிறுத்தி நமது தேசிய கொடியை ஏற்றிய கர்நாடக காவலர்கள் என பரவும் வீடியோவில் இருப்பது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி என்பதை அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.